×

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நெடுவாசல் போராட்டக்காரர்கள் சந்திப்பு: காவிரி டெல்டாவை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு நன்றி

சென்னை:  புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் போராட்டக் குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், புதுக்கோட்டை நெடுவாசல் போராட்டக் குழுவை சேர்ந்த வேலு அவர்கள் தலைமையில் 5 கிராம மக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். இச்சந்திப்பானது, சென்னை பசுமை வழிசாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது, காவிரி டெல்டா பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, நெடுவாசல் போராட்டக் குழுவினர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

இதற்கிடையில், நெடுவாசல் மட்டுமின்றி, எந்த கிராமமும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில், முதலமைச்சர் எடுத்த முடிவு, விவசாயிகளுக்கு மட்டுமின்றி, அடுத்த தலைமுறையினருக்கும் நன்மை தரும் வகையில் அமைந்துள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நெடுவாசல் போராட்ட குழுவினர், முதலமைச்சரின் சந்திப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என்றனர். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பை சட்டமாகவும், சட்டமன்றத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்ற அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும், காவிரி உபரி நீரை நெடுவாசல் கிராமத்திற்கு திருப்புவதற்காக நிதி ஒதுக்குவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்ததாக, நெடுவாசல் போராட்டக் குழுவினர் கூறினர்.

Tags : protesters ,CM Edappadi Palanisamy ,Cauvery Delta , Chief Minister Edappadi Palanisamy, columnist, protestors, meet, Cauvery delta, thank you
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு...