×

சத்துவாச்சாரியில் 60 லட்சம் செலவில் கட்டி முடித்து 3 ஆண்டுகளான சிறுவர் நீச்சல் குளம் திறக்க கலெக்டர் உத்தரவிட்டும் ஒரு துரும்பு பணி கூட நடைபெறவில்லை: கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்கவிடும் அதிகாரிகள்

வேலூர்: சத்துவாச்சாரியில் 60 லட்சம் செலவில் கட்டி முடித்து 3 ஆண்டுகளான சிறுவர் நீச்சல் குளம் திறக்க கலெக்டர் உத்தரவிட்டும் ஒரு துரும்பு பணி கூட நடத்தாமல் கலெக்டர் உத்தரவை அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரியில் முன்னாள் அமைச்சர் விஐய்யின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 60 லட்சம் செலவில் சிறுவர்களுக்கான நீச்சல் குளம் பொதுப்பணித்துறையின் மூலமாக கட்டப்பட்டது. சிறுவர்கள், இளைஞர்கள் குளிக்க வசதியாக 6 அடி வரை ஆழம் அமைக்கப்பட்டது. நீச்சல் குளத்தைச் சுற்றிலும் கிரிப் டைல்ஸ்கள், பதிக்கப்பட்டது. மேலும், சிறுவர்களுக்கான உடைகள் மாற்றும் அறை, துணிகள் வைக்கும் அலமாரிகள் உள்ளிட்ட நவீன கட்டமைப்புடன் நீச்சல் குளம் கட்டி முடிக்கப்பட்டது.

ஆனால் பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படவில்லை. தற்போது நீச்சல் குளத்திற்கான பணிகள் முடிந்ததா? அல்லது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதா? என்பது தெரியாத நிலையில் கட்டி முடித்து 3 ஆண்டுகள் முடிந்த நிலையில் பூட்டியே கிடக்கிறது. பயனற்ற நிலையில் உள்ள நீச்சல் பயிற்சி குளத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரன் நாளிதழில் படத்துடன் கூடிய விரிவான செய்தி கடந்த 22ம் தேதி வெளியிடப்பட்டது.தினகரன் செய்தி எதிரொலியாக கலெக்டர் சண்முகசுந்தரம் கடந்த ஜனவரி 25ம் தேதி காலை மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகளை நீச்சல் குளம் அமைந்துள்ள பகுதிக்கு நேரில் வரவழைத்து ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது: நீச்சல் குளம் கட்டி முடித்து திறக்கப்படாமல் இருந்தது சிறுவர்களுக்கு எதிரான செயல்.

எனவே நீச்சல் குளத்தை பராமரிக்க மாநகராட்சி, வருவாய்த்துறை, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் என்று முத்தரப்பு ஒப்பந்தம்பேட்டு பரமாரிக்க வேண்டும். நீச்சல் குளத்தின் நுழைவு வாயில் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கவும், மின்விளக்கு வசதிகள் மேற்கொள்ள எனது நிதியில் இருந்தோ, எந்த திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க முடியுமோ அதிலிருந்து நிதி ஒதுக்கப்படும். மேலும் லாபம் சம்பாதிக்கும் வகையில் இல்லாமல், அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் குறைந்த கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். உடனடியாக நீச்சல் குளத்தை திறக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் ஆய்வுசெய்து சிறுவர்களுக்கான நீச்சல் குளத்தை திறக்க உத்தரவிட்டும், நீச்சல் குளத்தை திறக்க அதிகாரிகள் ஒரு துரும்பு பணிகூட மேற்கொள்ளவில்லை. கலெக்டர் ஆய்வு செய்ய வந்தபோது எப்படி இருந்ததே அதேபோல் எந்தமாற்றமும் இன்றி அப்படியே உள்ளது. இப்படி அதிகாரிகள் கலெக்டரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு வருகின்றனர். இனி யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.Tags : swimming pool ,collector ,construction ,building ,Sattacharya , 60 lakhs,collector ,swimming pool, ,air
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்...