×

முத்துப்பேட்டை கீழநம்மங்குறிச்சியி்ல் கஜா புயலால் சேதமடைந்த மரக்கன்று தோட்டம் மீண்டும் உயிர் பெறுமா?: சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அடுத்த கீழநம்மங்குறிச்சியில் கஜா புயலில் சேதமான மரக்கன்றுகள் உருவாக்கும் தோட்டம் மீண்டும் செயல்படுமா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 29 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு விவசாயம் முக்கிய வாழ்வாதாரமாக இருந்தாலும் அதனுடன் பலவிதமான மரங்களும் இப்பகுதி மக்களுக்கு வாழ்வாதாரங்களில் ஒன்றாக உள்ளது. இதில் விவசாயத்தில் ஆண்டு தோறும் வறட்சி, வெள்ளம் மற்றும் பேரிடர் பாதிப்புகள் தொடர்ச்சியாக வந்து விவசாயிகளை சோதனைக்கு ஆளாக்கி வந்த நிலையில் மரங்களை மட்டுமே வாழ்வாதாரமாக இருந்து வாழ்ந்து வந்த இப்பகுதி மக்களுக்கு தங்கள் தலையில் இடி விழுந்தது போல் 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி முத்துப்பேட்டை ஒட்டுமொத்தத்தையும் புரட்டி போட்டது கஜா புயல். இதில் தென்னை உட்பட பலன்தரும் லட்சக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதனால் 25 ஆண்டுகள் பின்நோக்கி தங்களின் வாழ்வாதாரங்களை இப்பகுதி மக்கள் இழந்துள்ளனர்.

முத்துப்பேட்டை ஒன்றியம் முழுவதும் மரங்களால் பசுமை போர்த்தி காணப்பட்ட நிலையில் இன்று மரங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அதனால் இன்றைக்கு பல்வேறு அமைப்புகள் மரக்கன்றுகளை நடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்தநிலையில் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பெரிய ஊராட்சிகளில் ஒன்றான கீழநம்மங்குறிச்சியில் அரசின் தோட்டக்கலை துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சில ஆண்டுகளாக பதியம் வைத்தும் விதை வைத்தும் மரக்கன்றுகள் உருவாக்கும் திட்டம் செயல்பட்டு வந்தது. இதில் பலவிதமான பலன் தரும் மரக்கன்றுகள், நிழல்தரும் மரக்கன்றுகள் என அனைத்தும் உருவாக்கப்பட்டு சுற்றுபகுதி கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு தாக்கிய கஜா புயலின் கோரதாண்டவத்தில் சிக்கி சின்னாபின்னமாகி சேதமானது. மரங்களை அழித்த கஜா மரபிஞ்சுகளையும் நாசமாக்கி விட்டு சென்றது. இதனால் இன்று வரை அந்த தோட்டம் செயல்படாமல் உள்ளது. தற்போது கஜாவிற்கு பிறகு அவசிய தேவையாக கருதப்படும் மரக்கன்றுகள் உற்பத்தி தோட்டம் இன்று செயல் படாமல் இருப்பது இப்பகுதி மக்களை வேதனைப்பட வைத்துள்ளது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் எந்த பலனுமில்லை. இடைப்பட்ட காலத்தில் ஊராட்சி நிர்வாகம் செயல்படாததால் அந்த திட்டமும் அந்த தோட்டமும் அதோடு முடிந்தது. ஆகவே தற்பொழுது மீண்டும் ஊராக உள்ளாட்சி தேர்தல் முடிந்து புதிய நிர்வாகிகள் வந்துள்ள நிலையில் கஜா புயலில் வீழ்ந்த இந்த மரக்கன்றுகள் உருவாகும் தோட்டத்தை சீரமைத்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : gourmet garden ,storm ,Community activists ,Gaja ,Keezhangamangurichi ,Gaja Storm , damaged,Gaja storm, community ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...