×

முதுமக்கள் தாழிகள் சேதம் ஆதிச்சநல்லூர் பரம்பில் இயந்திரம் மூலம் குழி தோண்ட தடை: வரலாற்று ஆர்வலர்கள் மகிழ்ச்சி

ஸ்ரீவைகுண்டம்: ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் முதுமக்கள் தாழிகள் சேதமடைந்ததால் இயந்திரங்களை பயன்படுத்தி குழி தோண்ட தடை விதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் வேலி அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகளை மூடும் பணி நேற்று நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை வரையுள்ள தாமிரபரணிக்கரைகளில் அகழாய்வு செய்ய தமிழக தொல்லியல் துறையினர் முடிவு செய்தனர். இதன் முதற்கட்ட நடவடிக்கையாக கடந்த ஜன. 31ம் தேதி 10 பேர் கொண்ட தமிழக தொல்லியல் துறை குழுவினர் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்தினை தேர்வு செய்தனர்.

ஆதிச்சநல்லூரில் தமிழக தொல்லியல் துறையினர் அகழாய்வு பணி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை சுற்றி ஏற்கனவே கம்பி வேலிகள் அமைக்கும் பணி நடந்து வந்தது. இப்பணிக்காக விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு குழி தோண்டியுள்ளனர். அதில் சுமார் 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உடைந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த வரலாற்று ஆர்வலர்கள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் வேலி அமைக்க ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தக்கூடாது என கோரிக்கை விடுத்தனர். ஜேசிபி மூலம் தோண்டப்பட்ட குழியினையும் சேதமடைந்த முதுமக்கள் தாழிகளையும் மத்திய தொல்லியல்துறை அதிகாரி எத்திஸ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைதொடர்ந்து, ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் வேலி அமைக்கும் பணிக்கு தொல்லியல் துறையினர் தற்காலிகமாக தடை விதித்ததுடன் தோண்டப்பட்ட குழிகளையும் உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து குழிகள் நேற்று மூடப்பட்டது. ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மீண்டும் நடைபெற உள்ள அகழ்வாராய்ச்சியும் பரம்பு பகுதியில் இயந்திரத்தினை கொண்டு குழி தோண்ட விதிக்கப்பட்டுள்ள தடையும் வரலாற்று ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  



Tags : Adichchanallur Parambal Engine: History enthusiasts rejoice , Damage,elderly, Adichchanallur Parambil,machine,enthusiasts
× RELATED கோவை மாவட்டம் முண்டாந்துறை...