×

வீட்டுமனைப்பட்டா வழங்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வாலிபரால் திடீர் பரபரப்பு

கடலூர்: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து மாற்றுத்திறனாளி வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் அருகே உள்ள வெள்ளை பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தரணி (38), மாற்றுத்திறனாளி. மூன்று சக்கர சைக்கிளில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்திருந்தார். அப்போது திடீரென பாட்டிலில் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றினார். பின்னர் தீக்குச்சியை உரசி உடலில் நெருப்பை பற்ற வைக்க முயன்றார். இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பாய்ந்து சென்று தரணி இடம் இருந்த தீக்குச்சி, மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரை எச்சரித்து போலீசார் அனுப்பினர். இதுதொடர்பாக ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த தரணி கூறியதாவது: நான் கடலூரில் வசித்து வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தேன். ஆனால் அதிகாரிகள் வீட்டுமனைபட்டா தராமல் உள்ளனர். இதுதொடர்பாக கடலூர் தாசில்தார் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வேதனை அடைந்தேன். இதைத்தொடர்ந்து தீக்குளிக்க முயன்றேன். இவ்வாறு கூறினார். மாற்றுத்திறனாளி வாலிபர் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டத்தின் போது தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : outburst ,collector ,office ,Cuddalore , Cuddalore
× RELATED முதலாமாண்டு மாணவர் சேர்க்கை...