தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை மகாரத தேரோட்டம் நடந்தது. இதில் பெண்கள் மட்டுமே பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில், தைப்பூசத் தேர்த்திருவிழா 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலை 7 மணிக்கு சிவசுப்ரமணியசுவாமி திருவீதி உலா நடந்தது. 8ம் தேதி சிவசுப்ரமணியருக்கு வள்ளி தேவசேனாவுடன் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை, விநாயகர் ரதம் திருவீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று (10ம் தேதி) சுப்ரமணியர் மகா ரதம் எனும் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேர்த்திருவிழா நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு, கோயிலில் இருந்து சிவசுப்ரமணிய சுவாமி புறப்பாடு நடந்தது.
காலை 9.15 மணிக்கு திருத்தேரில் சிவசுப்ரமணியர் தேவசேனா-வள்ளி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 10 மணிக்கு மகாரதத்தை ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அரோகா கோஷம் விண்ணை பிளந்தது. தேர்த்திருவிழாவில் சுமார் லட்சம் பேர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கூட்டம் அலைமோதியதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி, 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை (12ம் தேதி) சிவசுப்ரமணிய சுவாமி தெப்ப உற்சவம், 13ம் தேதி சயன உற்சவம் நடக்கிறது.