×

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி கார் டிரைவராக திருநங்கை நியமனம்

தூத்துக்குடி: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்டரி காரை திருநங்கை டிரைவர் அபர்ணா இயக்கி வருகிறார்.தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கும், தங்களின் பல்வேறு தேவைகளுக்கும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் அதிகமாக வந்து செல்கின்றனர்.இவ்வாறு வந்துசெல்லும் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலை ரோட்டிலுள்ள பஸ் நிறுத்தத்திலிருந்து கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் எளிதில் வந்து சென்றிட ஏதுவாக இலவசமாக பேட்டரி கார் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் பணி ஓய்வு பெற்றார். இதனால், பேட்டரி கார் இயக்கப்படாததால் மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வந்தனர். பேட்டரி காரை இயக்க மாற்று டிரைவர் நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருநங்கைகள் பலரும் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் ஏற்கனவே மனு கொடுத்திருந்தனர். இதனடிப்படையில், அந்த மனுக்களை ஆய்வுசெய்த கலெக்டர் சந்தீப் நந்தூரி, பேட்டரி கார் இயக்குவதற்கான டிரைவர் பணியை கோவில்பட்டியை சேர்ந்த திருநங்கை அபர்ணாவுக்கு வழங்கியுள்ளார். இந்த உத்தரவின்பேரில் திருநங்கை அபர்ணா நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்டரி வாகனத்தை இயக்கும் பணியில் சேர்ந்து வாகனத்தை இயக்கினார்.இதுகுறித்து திருநங்கை அபர்ணா கூறியதாவது, ‘நான் அரசுத்துறையில் பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று தேர்வுகளை எழுதி வந்துள்ளேன்.

அதோடு கலெக்டரை நேரில் சந்தித்து மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசுத்துறைகளில் திருநங்கைகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் எனக்கூறி மனு அளித்திருத்தோம். இதற்கேற்ப, எனக்கு மாற்றுத்திறனாளிகள் வாகனத்தை இயக்குவதற்கான ஓட்டுனர் பணியை கலெக்டர் வழங்கியுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது என்றார். முன்னதாக கலெக்டர் அலுவலக வாகன ஓட்டுநர்கள், திருநங்கை அபர்ணாவிற்கு பேட்டரி காரை இயக்குவது குறித்து பயிற்சி அளித்தனர்.

Tags : Tuticorin Collector ,Office Battery Car Driver ,Office Transgender Appointment ,Thoothukudi Collector , Thoothukudi ,Collector, Office, Battery Car ,Driver
× RELATED தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், மாநகராட்சியில் பொங்கல் விழா