×

குடியிருப்புகளை குறிவைக்கும் ‘கொம்பன்’ யானை தாக்கி 2 வீடுகள் சேதம்

மூணாறு: மூணாறு அருகே வனப்பகுதியில் இருந்து இறங்கிய காட்டுயானை 2 வீடுகளை இடித்து துவம்சம் செய்தது. 4 மணிநேரம் அட்டகாசம் செய்த யானையை மக்கள் பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர். கேரள மாநிலம், மூணாறு சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர் கதையாகி வருகிறது. இடுக்கி மாவட்டம், பூப்பாறை சுண்டல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் மதிகெட்டான் சோலைவனத்தில் இருந்து ‘அறிக்கொம்பன்’ என்ற ஒற்றை யானை இறங்கியது. குடியிருப்புகளில் நுழைந்த யானை வேல்மயில், ஆரோக்கியசாமி ஆகியோரது வீடுகளை இடித்து துவம்சம் செய்தது.

சம்பவம் நடந்தபோது வேல்மயில், அவரது மனைவி வீட்டில் இல்லை. எனவே இருவரும் உயிர்தப்பினர். இதேபோல் வீட்டின் முன்பக்கம் யானை தாக்குதல் நடத்திக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆரோக்கியசாமி, அவரது மனைவி முருகம்மாள் பின்வாசல் வழியாக ஓடி உயிர்தப்பினர். அதிகாலை 4 மணிவரை யானையின் அட்டகாசம் நீடித்தது. பின்னர் மக்கள் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்டியடித்தனர். வீட்டை இழந்த ஆரோக்கியசாமி கூறுகையில், ‘‘பல நாட்களாக அறிக்கொம்பன் யானை இந்த குடியிருப்புப்பகுதியில் உலவி வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. நேற்று முன்தினம் யானை நுழைந்தது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் வரவில்லை. யானைகளிடம் இருந்து எங்களை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Komban
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை