ஓஎம்ஆர் சாலையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற கோரிக்கை: மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மனு

டெல்லி:  சென்னையில் ராஜீவ் காந்தி சாலையில் அமைந்திருக்கும் 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று மனு அளித்தார். அந்த மனுவில், சென்னை ராஜீவ் காந்தி சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் ஓ.எம்.ஆர்., பெருங்குடி, ஐடெல், ஈ.சி.ஆர்., மற்றும் உத்தண்டி ஆகிய 5 சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் இந்தச் சாலையில், அடுத்தடுத்து 5 சுங்கச்சாவடிகள் இருப்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகத் தெரிவித்துள்ளார். இதேபோல, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அதில், சென்னை ஐஐடி ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வந்த கிருஷ்ணா கேட் வாசலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி முன்னறிவுப்பு இல்லாமல் மூடியதால், அவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, மூடப்பட்ட கிருஷ்ணா கேட் வாசலைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  மேலும், சென்னை ஐஐடியில் நடந்த தற்கொலை நிகழ்வைக் குறிப்பிட்டு, மத்திய கல்வி நிலையங்களில் தொடரும் மாணவ, மாணவிகளின் தற்கொலைகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

>