×

கொல்லிமலை சிற்றூர்களில் 16, 17ம் நூற்றாண்டு சோழர்கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு

முசிறி: கொல்லிமலை பகுதியில் அமைந்துள்ள சிற்றூர்களில் சோழர் கால சிற்பங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். முசிறி அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் சந்திரகாசன், பழங்குடி மக்கள் பயன்பாடு குறித்த ஆய்விற்காக கொல்லிமலை சிற்றூர்களில் ஆய்வு மேற்கொண்ட அக்கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் அகிலா மற்றும் திருச்சி தனியார் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் நளினி ஆகியோர் சோழர்கால சிற்பங்களை கண்டறிந்துள்ளனர். இந்த சிற்பங்கள் குறித்து ராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் கலைக்கோவன் கூறியதாவது: கொல்லிமலை சிற்றூர்களில் செம்மேட்டிற்கு அருகிலுள்ள கரையான் காட்டுப்பட்டியில் மூன்று சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒன்று சேட்டை தேவியும், மகிடாசுரமர்தினியும் சோழர்கால தக்கவையாக கருதலாம். மற்றொரு மகிடாசுரமர்த்தினி சிற்பம் பொது காலம் 16 அல்லது 17ம் நூற்றாண்டிற்க்கு உட்பட்டதாக இருக்க வாய்ப்பு உண்டு. துர்க்கை என்று அழைக்கப்படும் மகிடாசுரமர்த்தினி குறித்த விரிவான விபரங்கள் தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

சோழர்கால தக்கதாக கொள்ளும் வகையில் மகிடாசுரமர்த்தினி முன் கைகளில் வில்லும், அம்பும் கொண்டவராய் எருமை தலையின் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை, வளைகள், சரப்பளி எனும் அகலமான கழுத்தணி மார்புக் கச்சு, பட்டாடை பெற்றுள்ள அவரது பின் கைகளில், வாளும், கேடயமும் அம்மனின் பின்னால் அவரது வாகனமான அழகிய கலைமான் உள்ளது. பொதுவாக மகிடாசுரமர்த்தினி பின் கைகளில் காணப்பெறும் சங்கும் சக்கரமும் சிற்பத்தின் கைகளில் இடம் பெறாமல் இதன் தனித்தன்மையை கூறும் வகையில் உள்ளது. புதை சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள மற்றொரு மகிடாசுரமர்த்தினி நிற்கும் நிலையிலும் ஆடை அணிகலன்களும் சோழர்கால படிமத்தை ஒத்திருந்தாலும் இரண்டுக்கும் இடையில் மூன்று சிறப்பான வேறுபாடுகளைக் காணமுடிகிறது. சிற்ப்பத்தின் முன் கைகள் கருவிகள் கொள்ளவில்லை. வல முன் கை காக்கும் குறிப்பில் அமைய, இட முன் கை உடல் ஒட்டி நிகழ்ந்துள்ளது. வழக்கமான மகிடாசுரமர்த்தினி சிற்பங்கள் போல் இதுவும் பின் கைகளில் சங்கு சக்கரம் கொண்டுள்ளது மிக முக்கியமான வேறுபாடாக இதன் புதிய வடிவத்தை குறிப்பிடலாம். பொதுவாக சிற்பங்கள் அவை செதுக்கப்படும் கற்பலகையில் இருந்து புடைத்து காணப்படும். ஆனால் இது போன்ற சிற்பங்கள் பலகையை குடைந்து அதன் உட்புறத்தே அமைக்கப்படுகின்றன. பழங்குடி மரபுகளில் இவ்வகை சிற்பங்கள் காணப்பட்டாலும் புதை சிற்பங்கள் நகர் பகுதிகளைவிட பழங்குடி வாழ்விடங்களில் கூடுதலாக கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொது காலம் 8ம் நூற்றாண்டு வடிவமைப்பில் உள்ள சேட்டை தேவியின் சிற்பம் தனித்து காணப்படுகிறது. இத்தெய்வம் பற்றிய குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளில் (தவ்வை, மாமுகடி) இடம் பெற்றுள்ளன. விஷ்ணுவின் தேவியான லட்சுமியின் தமக்கையாக இவ்வமைப்பை கருதப்படுவதால் இவ்வம்மை மூத்த தேவி என்றும் அழைப்பதுண்டு. இரு கால்களையும் தொங்கவிட்ட நிலையில் பட்டாடை அணிந்து இருக்கையில் அமர்ந்துள்ள இவ்வம்மை வல கை காக்கும் குறிப்பில் இருக்க, இடக்கை தொடை மீதுள்ளது. மலர்ப்பதக்கம் பொருந்திய கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், மோதிரங்கள் ஆகியவற்றுடன் சுவர்ணவைகாக்ஷம் எனப்படும் பொன்னாலான மார்பனியும் அணிந்துள்ள இவ்வம்மைக்கு மார்புகட்சு இல்லை. அம்மையின் இருபுறத்தும் காணப்படும் உயரமான இருக்கைகளில் வலப்புறம் அவரது மகனான நந்திகேஸ்வரர், இடப்புறம் மகள் அக்னிமாதாவும் சுகாசனத்தில் உள்ளனர்.
மாந்தன் என்று அழைக்கப்படும் நந்தி முக மகனின் கையில் தடி, சிற்றாடை, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி அணிந்துள்ள அவரது முகம் அம்மையை நோக்கியிருக்க, இடக்கை தொடை மீது இடபுறம் உள்ள அக்கினிமாதா இடக்கையை தொடை மீது இருத்தி, பழம் போன்றதொரு பொருளை கொண்டுள்ளார். அவரது கழுத்தில் முத்துச்சரம், இடையில் பட்டாடை, சேட்டை தேவிக்கும், நந்திகேஸ்வருக்கும் இடைப்பட்ட பகுதியில் தேவியின்க்காக கொடி காட்டப்பட்டுள்ளது. பழமை பொருந்திய இம்மூன்று சிற்பங்களும் அடையாளம் காணப்பட்ட நிலையில் ஊர்மக்களின் பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Cholalai ,hills ,Kolli Hills , kolli hills
× RELATED குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு