×

தடகள வீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதாந்திர ஓய்வூதிய திட்டம் : விளையாட்டுத்துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு அறிவிப்பு

டெல்லி : தடகள வீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்று மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு அறிவித்துள்ளார். இந்த திட்டம் தொடர்பாக அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் (Pension to Meritorious Sportspersons scheme) திட்டத்தின் கீழ் இதுவரை 627 விளையாட்டு வீரர்கள் மாத ஓய்வூதியமாக ரூ. 12,000 முதல் 20,000 வரை பெறுவதாக கிரேன் ரிஜிஜு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்றவர்களுக்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதன்படி இந்திய குடிமக்கள் ஆக உள்ள விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டு, உலக கோப்பை, மாற்று திறனாளிகளுக்கு ஒலிம்பிக் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றவர்களுக்கு 30 வயது நிறைவடைந்தவுடன் அல்லது விளையாட்டில் இருந்து முற்றிலும் ஒய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கிரேன் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

மேலும், விளையாட்டு வீரர்களுக்கான பண்டிட் தீண்டயல் உபாத்யாய் தேசிய நல நிதியம் திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து விளையாட்டு அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கிரேன் ரிஜிஜு ட்விட்டரில் தெரிவித்தார். இந்த திட்டமானது, ஏழ்மையில் வாழும் முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கும், நோயால் அவதிப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வரும் முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என்றும் கிரேன் ரிஜிஜு குறிப்பிட்டுள்ளார்.  இந்த திட்டம்  ஊனமுற்ற மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கும்  சமமாக பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Crane Rijiju ,athletes , Month, Pension, Sports, Minister, Crane Rijiju, Statesmen, Sports, Players
× RELATED திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலை...