×

காவிரி- கோதாவரி நதிகளை இணைக்க விரிவான திட்ட அறிக்கை: மாநிலங்களவையில் மத்திய அரசு எழுத்துபூர்வமாக பதில்

டெல்லி:  காவிரி- கோதாவரி நதிகளை இணைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி-கோதாவரி நதிகள் இணைக்கப்படும் எனவும் அதற்காக 60 ஆயிரம் கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார். அதன்பின்னர், பிரதமர் மோடியை சந்தித்தபோது இதுதொடர்பான கோரிக்கை மனுவையும் அவர் அளித்திருந்தார். இந்நிலையில் காவிரி-கோதாவரி நதிகளை இணைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஆந்திர மாநில உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலமாக நீர்வளம் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா பதில் அளித்துள்ளார். அவற்றில், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஒருமித்த கருத்துடன் சட்டபூர்வமான திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கட்டாரியா மீண்டும் தெரிவித்தார்.

மேலும், அவர் காவிரி-கோதாவரி நதிகளுக்கு 3 இணைப்புகள் மூலம் தண்ணீரை கொண்டு செல்ல தேசிய நீர்மேம்பாட்டு நிறுவனம்,  திட்டம் தயாரித்திருப்பதாகவும் கூறினார். வரைவுத் திட்டத்தின்படி கோதாவரியின் ஜனம் பேட்டையிலிருந்து கிருஷ்ணா-நாகார்ஜுனா சாகர் வரை முதலில் இணைக்கப்படும். பின்னர், அங்கிருந்து சோம சீலா-பெண்ணாறு வரை 2வது கட்டமாகவும், சோம சீலாவிலிருந்து கல்லணை வரை 3வது கட்டமாகவும் இணைக்கப்படும். இதன்மூலம் கோதாவரியிலிருந்து நாகார்ஜுனா சாகருக்கு 247 டிஎம்சி தண்ணீரை திருப்பி விடவும் அதன்பின்னர், அங்கிருந்து தேவைக்கேற்ப கிருஷ்ணா, பெண்ணாறு வழியாக காவிரி படுக்கைக்கு தண்ணீரை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 2018-19ம் ஆண்டின் கணக்கின்படி 60 ஆயிரத்து 361 கோடி ரூபாய் செலவாகும் என தேசிய மேம்பாட்டு நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாக வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Godavari Rivers Combining Cauvery , Cauvery, Godavari, River, Project Report, Central Government, Response
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...