×

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்ட ஈரான்: 4வது முறையாக தோல்வி!

டெஹ்ரான்: அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்ட ஈரான் தொடர்ந்து 4வது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஈரான் புரட்சி படை தளபதி  காசிம் சுலைமானி அமெரிக்க விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.  அவர் அமெரிக்காவுக்கு எதிராக தீவிரவாத சதியில் ஈடுபட்டுவந்ததால் அவரை கொன்றதாக அமெரிக்கா தெரிவித்தது.  இந்நிலையில் அமெரிக்கா ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவை பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் ஈரான், அமெரிக்க ராணுவ  தளவாடங்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா ஈரான் இடையே மோதல் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், ஈரான், மற்ற உலக நாடுகளுக்கு இணையாக விண்வெளி திட்டத்தில் சாதிக்க வேண்டுமென தீவிர முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் அந்த நாடு விண்வெளி திட்டத்தை ஒரு மறைவாக பயன்படுத்தி அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்த பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் ஈரான் தனது விண்வெளி திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் விண்வெளி திட்டத்தில் ஈரான் தொடர்ந்து தோல்விகளைதான் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் ‘ஸாபர்’ என்று பெயரிடப்பட்ட புதிய செயற்கைக்கோள் ஒன்றை சிர்மோர்க் ராக்கெட் மூலம் ஈரான் நேற்று முன்தினம் மாலை விண்ணில் செலுத்தியது.

ஆனால் அந்த செயற்கைக்கோள் சுற்றுவட்டப்பாதையில் நுழையமுடியாமல் போனது. இதனால் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து பேசிய ஈரான் ராணுவ அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. நாம் நமது இலக்குகளை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம். ஆனால் ‘ஸாபர்’ திட்டமிட்டபடி சுற்றுப்பாதையை அடையவில்லை, என கூறியுள்ளார். இதன்மூலம் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சியில் ஈரான் தொடர்ந்து 4வது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.Tags : Iran ,opposition ,US ,satellite launch , Iran, Satellite,USA, failed
× RELATED ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை உடனே மீட்க ஜவாஹிருல்லா கோரிக்கை