×

கத்திவாக்கம் பஜார் தெருவில் இடிந்து விழும் நிலையில் சமூக நலக்கூடம்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 2வது வார்டுக்கு உட்பட்ட கத்திவாக்கம் பஜார் தெருவில் சமுதாய நலக்கூடம் அமைந்துள்ளது. கத்திவாக்கம் பகுதி நகராட்சியாக இருந்தபோது இந்த சமூக நலக்கூடத்தை அப்பகுதி மக்கள் தங்களின் இல்ல திருமணம், காதணி விழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த பகுதி மாநகராட்சியுடன் இணைத்த பிறகு, இந்த சமூக நலக்கூடத்தை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சமூக நலக்கூட கட்டிடம் பழுதடைந்தது. தற்போது, இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருப்பதால், சுற்றுப் பகுதி மக்கள் பீதியுடன் வசித்து வருகின்றனர்.  
எனவே, சிதிலமடைந்த இந்த சமூக நலக்கூடத்தை  இடித்து  விட்டு, அதே பகுதியில் அனைத்து வசதிகளுடன் புதிய சமூக நலக்கூடம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த சில நாட்களாக இந்த சமூக நலக்கூட கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இந்த கட்டிடத்தில் பழுதடைந்த துப்புரவு வாகனங்கள், பயன்படுத்தப்படாத பொருட்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் மலைபோல் குவித்து வைத்ததால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களும் உற்பத்தியாகி வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த சமூக நலக்கூட கட்டிடத்தை இடித்து விட்டு புதிய சமூக நலக்கூடம் கட்ட வேண்டும். இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த ஐந்து ஆண்டுகளாக திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில்  டெண்டர் விடப்பட்ட மார்க்கெட் வளாகம், பள்ளிக் கட்டிடம் பணிகளை துவக்கப்படாமல் கிடப்பில் உள்ளன. இந்த நிலையில், சிதிலமடைந்த சமூக நலக்கூட கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய சமூக நலக்கூடம் கட்டித்தர வேண்டும், என்ற கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால் நிதி இல்லை என்கின்றனர். நிதி  இல்லாமல் எதற்காக இவர்கள் டெண்டர் விடுகிறார்கள் என்பது புரியவில்லை. இந்த பகுதியில் மீனவர்களும் ஏழை எளிய மக்களும் அதிகமாக வசிப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு இப்பகுதியை புறக்கணித்து வருகிறார்கள். இந்த சமூக நலக்கூட கட்டிடம் இடிந்து விழுந்து பெரிய அளவில் அசம்பாவிதம்  ஏற்படும் முன்பு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டும்,’’  என்றனர்.

Tags : Kathivakkam Bazar Street , social welfare, Kathivakkam Bazar Street
× RELATED கத்திவாக்கம் பஜார் தெருவில் ரூ.86.5...