×

அரக்கோணம் வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில்16 கிலோ கஞ்சா கடத்திய போலீஸ் உள்பட 3 பேர் கைது

அரக்கோணம்: அரக்கோணம் வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் 16 கிலோ கஞ்சா கடத்திய போலீஸ்காரர் உட்பட 3 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி கைது செய்தனர். ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, அரக்கோணம் வழியாக கேரளா மாநிலம் ஆலப்புழை வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிலர் கஞ்சா கடத்தி வருவதாக, போதைப் பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

அதையடுத்து, சென்னைக்கு நள்ளிரவில் வந்த ரயில் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது.கஞ்சா கடத்தல் குறித்து ஏற்கனவே தகவல் கிடைத்ததால் அந்த ரயிலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில், 3 பெரிய பைகளில் 16 கிலோ அளவிற்கு கஞ்சா போதை பொருள் இருப்பது தெரியவந்தது. அதனை பதுக்கி வைத்த 3 பேரில் ஒருவரிடம் போலீஸ் அடையாள அட்டை இருந்தது. அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீஸ் அடையாள அட்டை வைத்திருந்தவர் போலீஸ்காரர் என்று கூறப்படுகிறது. இதனிடையே ரயில்வே போலீசும் அரக்கோணத்தில் அந்த ரயிலில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மதிப்பு ரூ.10 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். அதையடுத்து பறிமுதலான கஞ்சாவுடன் கைதான 3 பேரும் காஞ்சிபுரம் கொண்டு செல்லப்பட்டனர். எங்கிருந்து கஞ்சாவை வாங்கி, தமிழகத்தில் விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறித்தும், இதில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது குறித்தும் அவர்களிடம் விசாரணை தீவிரமாகி உள்ளது. இதேபோல் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : persons ,marijuana smuggler ,Dhanbad Express ,Arakkonam , Arakkonam, Dhanbad express train, 16kg ganja, kidnapped, police, 3 arrested
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...