×

ஆந்திராவில் மின் கட்டணம் உயர்த்தி அரசு அறிவிப்பு விவசாயத்திற்கு 9 மணி நேரம் மின்சாரம் இலவசம்

திருமலை: ஆந்திராவில் 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தக் கூடியவர்களுக்கு யூனிட்டுக்கு ரூ.95 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு 9 மணி நேரம் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐதராபாத்தில் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர்  சி.வி.வி.நாகார்ஜுனா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாதம் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் உபயோகிப்பவர்களுக்கு இதுவரை ஒரு யூனிட்டுக்கு ரூ.9.05 பைசா கட்டணம் இருந்து வந்தது. இந்நிலையில், 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் உபயோகிப்பவர்களுக்கு யூனிட்டுக்கு ரூ.90 பைசா அதிகரிக்கப்பட்டு, இனி அவர்கள் ரூ.9.95 பைசா கட்டணம் செலுத்த வேண்டும்.

விவசாயத்திற்கு ரூ.8,353.58 கோடியை மானியமாக வழங்க  ஒப்புக் கொண்டுள்ளோம். ஆந்திர கிழக்கு மின்விநியோகம் மற்றும் தெற்கு மின்வினியோக நிறுவனங்களுக்கு 2020-21ம் ஆண்டில் ரூ.14,349.07 கோடி நிதி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை  சமன் செய்வதற்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தால் அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.1,300 கோடி சுமையாக இருக்கும். நுகர்வோர், மாநில அரசின் நிதிச்சுமையை ரூ.2,893.48 கோடியாக இரண்டு மின்விநியோக நிறுவனங்களும் குறைத்துள்ளன.

இதனால் நிகர பற்றாக்குறை ரூ.10,060.63 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 9,500 மில்லியன் யூனிட் உபரி மின்சாரம் உள்ளது, அதனால்தான் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இம்முறை விவசாயத்துக்கான மின்விநியோகத்திற்கு சரியான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அரசின் கொள்கையின்படி விவசாயிகளுக்கு 9 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்படும். மேலும் அரசு வழங்கும் மானியங்களும் அதிகரித்துள்ளன. எனவே மானியங்களை படிப்படியாக திரும்பப் பெறுவதற்கான வழிகளை ஆலோசித்து வருகிறோம். நிறை குறைகள் இருந்தால் அதனை அடுத்த ஆண்டு சரிசெய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Andhra Pradesh Government ,hike ,Andhra Pradesh , Andhra Pradesh, electricity bills, elevator, government, agriculture, 9 hours, electricity, free
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...