சிந்து சமவெளி நாகரிகத்தை திடீரென சரஸ்வதி நாகரிகம் என்பதா? வரலாற்றைத் திரிக்கும் முயற்சியை வன்மையாக எதிர்க்கிறேன்: நாடாளுமன்றத்தில் வைகோ பேச்சு

சென்னை: சிந்து சமவெளி நாகரிகத்தை திடீரென சரஸ்வதி நாகரிகம் என்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று வைகோ பேசினார். நிதிநிலை அறிக்கை மீது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் பேசியதாவது:

நான், பெரியார் பிறந்த மண்ணிலிருந்து வந்திருக்கின்றேன். தந்தை பெரியாரும், பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும்தான் இந்த நாட்டில் சமூக நீதி என்ற கருத்தை விதைத்தவர்கள். அந்த சமூக நீதிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் ஒரு கருத்தைத் தெரிவித்து இருக்கின்றது. பதவி உயர்வில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் என்பது கட்டாயம் அல்ல. இட ஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை அல்ல என்று கூறி இருக்கின்றது. இதுகுறித்து இந்த அரசு என்ன சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் போகின்றது என்பதைத் தெரிந்துகொள்ள விழைகின்றேன்.

நிதிநிலை அறிக்கை குறித்து ஆராய, பிரதமர் கூட்டிய கூட்டத்தில், நிதி அமைச்சர் பங்கேற்றாரா? இல்லை. அவரை அழைக்கவே இல்லை. ஒன்றல்ல இரண்டல்ல, 13 முறை நடைபெற்ற ஆய்வுக்கூட்டங்களுக்கும் அவரை அழைக்கவில்லை. இது, தொழில் வணிகத் துறையினருக்குத் தவறான அறிகுறியைக் காட்டாதா? அரசில் உயர்ந்த இடத்தில் இருக்கின்ற நிதி அமைச்சரை அவமதிக்கின்ற செயல் ஆகாதா? சிந்து சமவெளி நாகரிகத்தை திடீரென சரஸ்வதி நாகரிகம் என்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அப்படி ஒரு நதி இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. அது ஒரு மாயை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: