×

விபத்தில் வாலிபர் மூளைச்சாவு சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்த இதயம்

சேலம்: மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், நுரையீரல் தானமாக பெறப்பட்டு, சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்கலத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் சுரேந்தர் (20), கேட்டரிங் டிப்ளமோ படித்தவர், சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் சூப்பர் வைசராக பணியாற்றினார். கடந்த 8ம் தேதி விபத்தில் சுரேந்தர் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இங்கு நேற்று முன்தினம் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது பெற்றோர், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி சுரேந்தரின் இதயம், நுரையீரலை சென்னைக்கும், மற்ற உறுப்புகளை கோவை மற்றும் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதயத்தை விமானத்தில் கொண்டு செல்வதற்காக, 21 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காமலாபுரம் விமான நிலையத்துக்கு வேகமாக செல்வதற்கு போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர். அதன்படி இதயம் மற்றும் நுரையீரலை பாதுகாப்பான பெட்டியில் வைத்து ஆம்புலன்ஸ் 19 நிமிடத்தில் விமானநிலையம் சென்றடைந்தது. அங்கு 11.45க்கு புறப்படும் விமானத்துக்கு 11.33 மணிக்கு மருத்துவக்குழுவினர் உறுப்புகளை எடுத்து கொண்டு விமானத்தில் ஏறினர். 11.40 மணிக்கே விமானம் சேலத்தில் இருந்து புறப்பட்டு 12.40க்கு சென்னை சென்றடைந்தது.

சுரேந்தரின் கல்லீரல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் கோவை அரசு கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொன்று சேலம் அரசு மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. சுரேந்தரின் பெற்றோர் கூறுகையில், ‘‘உடல் உறுப்புகள் தானம் மூலம் எங்கள் மகன் இறக்கவில்லை என நம்புகிறோம். அவன் 7 பேரின் உருவத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பான். உடல் உறுப்பை தானம் செய்வதை உதவி செய்ததாகவே நினைக்கிறோம்,’’ என்று கண்ணீர் மல்க கூறினர்.

* கவர்னர் காரை ஓவர் டேக் செய்து பறந்த ஆம்புலன்ஸ்
கவர்னர் பன்வாரிலால் புரோகித் சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் சேலம் வந்திருந்தார். நேற்று காலை 11.10 மணிக்கு சென்னை செல்வதற்காக காமலாபுரம் விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்டார். 11.11 மணிக்கு சேலம் அரசு மருத்துவ மனையில் இருந்து வாலிபர் சுரேந்தரின் உடல் உறுப்புகள் ஆம்புலன்சில் புறப்பட்டது. விஐபி எஸ்கார்டு கார் முன்னால் செல்ல அதன் பின்னால் ஆம்புலன்ஸ் சென்றது. கவர்னர் செல்லும் பாதையில் ஆம்புலன்ஸ் சென்றது. அவ்வழியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் ஆம்புலன்ஸ் முன்னால் செல்ல முடியாமல் கவர்னர் காரை பின்தொடர்ந்து சென்றது. பின்னர் ஓமலூர் சுங்கச்சாவடியை தாண்டியதும் கவர்னர் காரை, ஆம்புலன்ஸ் வாகனம் ஓவர்டேக் செய்து சென்றது. கவர்னரின் கார் 2 நிமிடத்திற்கு பின்பு விமானம் நிலையம் வந்தது.


Tags : accident victim ,Chennai ,Salem , Accident, Plaintiff, Brainstorm, Flight, Flying Heart
× RELATED நாவும் இதயமும்..!