×

வீட்டுக்காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் உமர் அப்துல்லாவை ஆஜர்படுத்த கோரி சகோதரி வழக்கு

புதுடெல்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் வீட்டுக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சகோதரி உச்ச நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஒரு சிலர் மட்டுமே தற்போது வரை விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வீட்டுக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா நேற்று உச்ச நீதிமன்றத்தில், சம்பந்தப்பட்டவர்களை ஆஜர்படுத்தக் கோரும் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், “நாடாளுமன்ற உறுப்பினராக நாட்டுக்காக பணியாற்றியவர், மாநில முதல்வராக இருந்தவர், மத்திய அமைச்சராக இருந்தவரால் மாநிலத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிடப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி இரவு முதல் உமர் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 5ம் தேதி பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை காவலில் வைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரரான சாரா சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். தாங்கள் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும், அவசர மனுவாக விசாரிக்க பட்டியலிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டனர். இந்த வாரத்திலேயே நீதிபதிகள் அமர்வு சாரா மனுகுறித்து விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags : Sister ,Omar Abdullah ,appearance ,Supreme Court Supreme Court , Homeschooling, Supreme Court, Umar Abdullah, Sister, demanding to appear
× RELATED மன்மோகன்சிங் கண்ணியமானவர் ஆனால் மோடி… உமர்அப்துல்லா விளாசல்