×

இட ஒதுக்கீட்டை அழிப்பது என்பது பாஜ, ஆர்எஸ்எஸ் ரத்தத்தில் ஊறியது: ராகுல்காந்தி விமர்சனம்

புதுடெல்லி: இட ஒதுக்கீட்டை முற்றிலும் அழித்துவிட வேண்டும் என்பது பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ்சின் டிஎன்ஏவில் உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். அரசு பணி, பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உத்தரகாண்ட் பாஜ அரசானது திட்டமிட்டே இடஒதுக்கீட்டை சீர்குலைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அளித்த பேட்டி:  

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவானது தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடுக்கு துணை நிற்காது. தினமும் காலையில் அவர்கள் எழுந்தவுடன், இந்த இடஒதுக்கீடானது அவர்களை எரிச்சலூட்டுகின்றது. இடஒதுக்கீடு என்பது நமது அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ளது மட்டுமின்றி, இந்த உரிமைகள் நமது அரசியலமைப்பினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டவை. இட ஒதுக்கீட்டை ஒரு வழி அல்லது ஏதாவது ஒரு வழியில் அகற்ற அவர்கள் முயற்சி செய்கிறார்கள். பிரதமர் மோடி அல்லது மோகன் பகவத்தின் எவ்வளவு பெரிய கனவாக இருந்தாலும் சரி, இடஒதுக்கீட்டை ஒழித்து கட்டும் நடவடிக்கையை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. இவ்வாறு ராகுல் குறிப்பிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கை: இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினால் ஆர்எஸ்எஸ் மகிழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்  பிரிவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர், கவலையடைந்துள்ளனர்.இட ஒதுக்கீடு கொள்கையை பாதுகாப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். பிரியங்கா (காங்கிரஸ் பொது செயலாளர்): இட ஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பாஜவின் முயற்சி புரிகிறது.

1. ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தொடர்ந்து இடஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றனர். 2. இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படை உரிமைகளை நீக்குவதற்காக உத்தரகாண்ட் பாஜ அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது. 3. உத்தரப் பிரதேச அரசு கூட உடனடியாக இடஒதுக்கீடு விதிகளில் மாற்றம் செய்ய தொடங்கியுள்ளது. பாஜ முதலில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்களுக்கான சட்டத்தை வலுவிழக்க முயற்சித்தது. தற்போது அரசியலமைப்பின்படி அவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படுவதை வலுவிழக்க செய்ய முயற்சிக்கிறது.

Tags : Baja ,RSS ,Rahul Gandhi ,BJP , Reservation, Destruction, Baja, RSS, Rahul Gandhi, Review
× RELATED ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல்...