×

வாங்கும் திறனை அதிகரிக்க செய்யாமல் சாமானிய மக்களிடமிருந்து பறிக்கிறது மத்திய அரசு: மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘சாதாரண மக்களின் வாங்கம் திறனை அதிகரிப்பதற்கு பதில், அவர்களிடமிருந்து அரசு பணத்தை எடுக்கிறது’’ என்று மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டினார். மக்களவையில் நேற்று நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசியதாவது: மறைந்த எங்கள் தலைவர் கலைஞர் வார்த்தைகளில் இந்த பட்ஜெட் பற்றி விவரிக்க வேண்டும் என்றால், ‘‘ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம். உள்ளே இருக்குமாம் ஈரும், பேனும்’’. பட்ஜெட்டை உற்றுப் பார்த்தால் அப்படித்தான் உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரி செலுத்துவதற்கு நடுத்தர வருவாய் பெறும் மக்கள் ஆடிட்டரை பார்க்க செல்ல வேண்டாம், ஒரு கிளிக் செய்தால் போதும், எளிதாக வரி செலுத்திவிடலாம் என கூறினார்.

எந்த பிரிவின் கீழ் நாங்கள் வருகிறோம் என புதிய வரி சட்டத்தை புரிந்து கொள்ளவே, ஆடிட்டருக்கு இன்னும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. புதிய வரிமுறையை எளிதாக விவரிக்க வேண்டும் என்றால், தோசை கடையை உதாரணமாக கூறலாம். ஒரு மசால் தோசை ரூ.50க்கு விற்கப்படுகிறது. புதிய விரி விதிப்புக்குப்பின் மசால் தோசை விலை ரூ.45. ஆனால் நிபந்தனைக்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, உங்களுக்கு சாம்பார் வேண்டும் என்றால் ரூ.15 கூடுதலாக செலுத்த வேண்டும். சட்னி வேண்டும் என்றால் கூடுதலாக ரூ.15 செலுத்த வேண்டும். ஆக, ரூ.50க்கு கிடைத்த மசால் தோசையின தற்போதைய விலை ரூ.80. இப்படித்தான் பட்ஜெட் உள்ளது. சேமிப்பு என்பது நமது ரத்தத்தின் ஒரு பகுதி. இது இந்திய மக்களின் மனதில் ஆழமாக உள்ளது. ஆனால் அரசு சேமிப்பு வட்டியை 7 முதல் 8 சதவீதம் வரை குறைத்துள்ளது. ஒரு காலத்தில் 13 சதவீதம் வரை வட்டி அளிக்கப்பட்டது. தற்போது, மக்கள் பணத்தை செலவழிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்.

இன்னொரு அபாயகரமான உண்மையை கூற விரும்புகிறேன். ஒருவர் ரூ.15 ஆயிரம் சம்பளம் பெற்றால், அவரது பாதுகாப்புக்கு பி.எப் பங்களிப்பு எடுக்கப்படுகிறது. இதற்கு வரிவிலக்கு இருந்தது. ஆனால் புதிய முறையில் இந்த விலக்கு இல்லை. சாதாரண மக்களின் வாங்கம் திறனை அதிகரிப்பதற்கு பதில், அவனிடமிருந்து அரசு பணத்தை எடுக்கிறது. என்ஜிஓவுக்கு உதவினாலும் தற்போது வரிவிலக்கு இல்லை. பிறருக்கு உதவுவதையும் ஊக்கமிழக்கச் செய்கிறது அரசு. லாபகரமான எல்ஐசியை உருவாக்கியது காங்கிரஸ் அரசு. எல்லோரும் எல்ஐசியில் முதலீடு செய்யத்தான் தற்போது விரும்புகின்றனர். ஏனென்றால் முதலீட்டு பணம் வட்டியுடன் திரும்ப கிடைக்க அரசு உத்தரவாதம். அதற்கு வருமானவரி விலக்கும் உள்ளது. ஆனால், தற்போது எல்.ஐ.சி முதலீட்டுக்கு ஒன்றும் கிடைக்காது என அரசு கூறுகிறது. உலகில் எங்கும் இரட்டை வரிமுறை இல்லை. அரசு ஏன் ஒற்றை வரிமுறையை கொண்டு வரக் கூடாது.

‘‘இயற்கை பேரிடர் ஏற்பட்டால், கிடைக்கும் ஒரே தொலைத் தொடர்பு சேவை பிஎஸ்என்எல். ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் ஏர் இந்தியா உள்ளது’’ என நமது அமைச்சர்கள் பேசிய விளம்பர ஒலி நாடக்கள் உள்ளன. சமீபத்தில் கூட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சீனா சென்று இந்திய மாணவர்களை ஏர் இந்தியா விமானங்கள் மீட்டு வந்தன. ஆனால் அரசு தற்போது அவற்றை எல்லாம் விற்கிறது. எல்ஐசி, ஏர் இந்தியாவை மட்டும் நிதியமைச்சர் விற்கவில்லை பிஎஸ்என்எல், பிபிசிஎல் உட்பட பல நிறுவனங்களை அரசு விற்கிறது. தற்போது தேசிய நெடுஞ்சாலைகளையும் அரசு விற்கிறது. அதிக வசூல் செய்யும் மையங்களாக நெடுஞ்சாலைகள் மாற்றப்படுகின்றன.

தற்போது பங்குகளில் முதலீடு செய்பவர்கள் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை ஈவுத் தொகை வரி செலுத்த வேண்டியுள்ளது. நல்ல நிதியமைச்சராக இருந்தால், வீண் செலவை குறைக்க வேண்டும். ஆதாருக்கு ரூ.12 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு அரசு ஏன் ரூ.4,800 கோடி செலவழிக்க வேண்டும். தேசிய குடியுரிமை பதிவு, தேசிய மக்கள்தொகை பதிவேடுக்க முதலில் எதிர்ப்பு தெரிவித்த மாநிலம் தமிழ்நாடு. இதற்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2.5 கோடி கையெழுத்துக்களை திரட்டி ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளார்.

வருவான வரி அதிகாரிகள் தொந்தரவு இருக்காது, வரி செலுத்துவதில் பாகுபாடு இருக்காது என நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ளது. நடிகர் ரஜினிகாந்துக்கு ரூ.1 கோடி வரி நிவாரணம் கிடைக்கிறது. முகம் இல்லாத உங்கள் வரி அலுவலகம் நடிகர் விஜய்க்கு குறிவைக்கிறது. சூட்டிங் நடக்கும் இடத்தில் இருந்து அவர் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்படுகிறார். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பு ஆக்குவோம் என்கிறீர்கள். ஆனால் நாட்டில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

கிராமங்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், இதையெல்லாம் நீங்கள் எப்படி செய்யப் போகிறீர்கள்? அனுமதிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளில், இன்னும் ஒன்று கூட வரவில்லை. எந்தப் பணியும் தொடங்கவில்லை. தமிழ் மொழியை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். திருக்குறளை கூறுகிறீர்கள். ஆனால் தமிழுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள். சமஸ்கிருதத்துக்கு கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. ஆனால் செம்மொழி தமிழுக்கு எதுவும் செலவழிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : government ,Dayanidhi Maran ,DMK ,Lok Sabha , Lok Sabha, Lok Sabha, Lok Sabha, DMK MP Dayanidhi Maran, indictment
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...