×

அல் உம்மா தீவிரவாதிகளுக்கு கேரளாவில் இருந்து கார்கள் கடத்தி விற்பனை: தனிப்படை விசாரணையில் 2 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் காரை வாடகைக்கு எடுத்துச் சென்று திருச்சூர் வாடானப்பள்ளியைச் சேர்ந்த இலியாஸ் (37) என்பவர் ஏமாற்றிவிட்டார். இது தொடர்பாக ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கோட்டயம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த கோட்டயம் டிஎஸ்பி ஸ்ரீ குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், பத்தனம்திட்டாவில் ஒரு கார் வாடகைக்கு இருப்பதாக போலீசாரே பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர். அதில் ஒரு தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த இலியாஸ் அந்த எண்ணில், வேறு பெயரில் தொடர்புக் கொண்டு பேசி உள்ளார். காரை வாடகைக்கு எடுக்க திருவல்லாவுக்கு ரயிலில் இலியாஸ் வந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது முக்கிய கூட்டாளி நிஷாத் என்பவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தமிழகத்தை சேர்ந்த அல்-உம்மா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இவர்கள், இயக்கத்தின் தலைவனான முகமது ரபீக் என்பவருக்கு கேரளாவில் இருந்து பல கார்களை கடத்தி விற்றுள்ளனர். முகமது ரபீக் பெங்களூரு குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு 14 ஆண்டு சிறையில் இருந்துள்ளார்.

இந்த 2 பேரும் கேரளாவில் இருந்து 80க்கும் மேற்பட்ட கார்களை கடத்தி முகமது ரபீக்குக்கு கொடுத்து வந்துள்ளனர். இந்த கார்களை விற்பனை செய்து தீவிரவாத இயக்கத்திற்கு பணம் சேகரித்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த விசாரணைக்கு பிறகு 2 பேரையும் போலீசார் கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விரைவில் தேசிய புலனாய்வு பிரிவுக்கு (என்ஐஏ) மாற்றப்படும் என்று தெரிகிறது.

Tags : militants ,Kerala ,Al-Umma ,probe , Al-Umma terrorist, Kerala, cars, hijacking, sale, separate investigation, 2 persons, arrested
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி