×

நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து விஷால் மேல்முறையீடு மனு தாக்கல்: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு, ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று ஏழுமலை, பெஞ்சமின் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். தீர்ப்பில், நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்த பின்பு எடுத்து எந்த முடிவுகளும் செல்லாது. நடிகர் சங்கத்திற்கான மறு தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்படுகிறார். தேர்தல் அதிகாரி மூன்று மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும்.வாக்காளர் பட்டியல் சரிபார்க்க பட வேண்டும் அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பலமுறை தேர்தல் நடத்தப்படவில்லை. அப்போதெல்லாம் பழைய நிர்வாகிகள் அவர்களின் பதவி காலம் முடிந்த பிறகும் சங்கத்தை நிர்வகித்து வந்துள்ளனர். தனி நீதிபதி எந்த ஒரு சட்டரீதியான அம்சத்தையும் ஆராயாமல் இந்த தேர்தலை ரத்து செய்துள்ளார். நடிகர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுவை கூட்டி, அதில் பெரும்பான்மையினரின் முடிவுக்கு ஏற்பத்தான் தேர்தல் நடத்துவது குறித்துமுடிவு செய்யப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Tags : Vishal ,cancellation ,actor union election Actor union election , Actor Association Election, Cancellation, Opposition, Vishal, Petition for Appeal, Inquiry
× RELATED என் கனவை முன்கூட்டியே நனவாக்கிய மிஷ்கின்: இயக்குனர் விஷால் நெகிழ்ச்சி