×

சென்னையில் 14ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: சென்னையில் வருகிற 14ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது, என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) வே.விஷ்ணு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து, வருகிற 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

இம்முகாமில் 35வயதிற்கு உட்பட்ட, 8ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளோமா, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதி உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000க்கும் மேற்பட்ட பணி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தனியார் துறை நிறுவனங்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Internship camp ,Chennai , Internship camp, Chennai, 14th
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...