×

சென்னையில் இருந்து கோவை சென்ற விமானத்தில் திடீர் கோளாறு 176 பயணிகள் உயிர் தப்பினர்

சென்னை: சென்னையில் இருந்து கோவை சென்ற விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், 176 பயணிகள் உயிர் தப்பினர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கோவை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 6.15 மணிக்கு புறப்பட்டது. இதில் 176 பயணிகள், 6 ஊழியர்கள் என மொத்தம் 182 பேர் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்தபோது இன்ஜின் பகுதியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார். தொடர்ந்து விமானத்தை இயக்கினால் ஆபத்து என்பதை உணர்ந்து விமானி, அவசரமாக சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள், விமானத்தை சென்னைக்கு மீண்டும் கொண்டு வரும்படி விமானிக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறங்க விமான நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதகதியில் நடைபெற்றன.

ஓடுபாதையை சுற்றிலும் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுடன் மருத்துவ குழுவினர் மற்றும் அதிரடிபடையினர் குவிக்கப்பட்டனர். அதன் பின்பு அந்த விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. அந்த விமானம் பத்திரமாக காலை 7 மணியளவில் தரையிறங்கியது. உடனடியாக பயணிகள்  கீழே இறக்கப்பட்டு, அங்குள்ள ஓய்வுகூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பழுதடைந்த விமானத்தை பழுதுபார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து மாற்று விமானம் தயார் செய்யப்பட்டு அதில் பயணிகள் ஏற்றப்பட்டனர். பின்பு அந்த விமானம், காலை 10 மணிக்கு கோவை புறப்பட்டு சென்றது.  உரிய நேரத்தில் விமானி எடுத்த நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக விமான நிலைய உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Tags : passengers ,Chennai ,flight ,Coimbatore. 176 ,Coimbatore , 176 passengers survived,sudden illness ,flight ,Chennai to Coimbatore
× RELATED கோவிலாலம்பூரில் சிக்கி தவித்த 113...