×

இன்னிங்ஸ், 44 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான் : 16 வயது நசீம் ஷா ஆட்ட நாயகன்

ராவல்பிண்டி: வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 44 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த 7ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. வங்கதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (82.5 ஓவர்). முகமது மிதுன் அதிகபட்சமாக 63 ரன் எடுத்தார். ஷான்டோ 44, லிட்டன் தாஸ் 33, கேப்டன் மோமினுல் ஹக் 30, மகமதுல்லா 25, தைஜுல் இஸ்லாம் 24 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகீன் அப்ரிடி 4, அப்பாஸ், ஹரிஸ் சோகைல் தலா 2, நசீம் ஷா 1 விக்கெட் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 445 ரன் குவித்து ஆட்டமிழந்தது. பாபர் ஆஸம் 143, ஷான் மசூத் 100, ஹரிஸ் சோகைல் 75, ஆசாத் ஷபிக் 65, கேப்டன் அசார் அலி 34 ரன் விளாசினர்.

இதைத் தொடர்ந்து, 212 ரன் பின் தங்கியநிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 16 வயது இளம் வேகம் நசீம் ஷா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. அவர் வீசிய 41வது ஓவரில் ஷான்டோ (38 ரன்), தைஜுல் இஸ்லாம் (0), மகமதுல்லா (0) அணிவகுக்க, டெஸ்ட் போட்டிகளில் மிக இளம் வயதில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய வீரர் என்ற பெருமை நசீம் ஷாவுக்கு கிடைத்தது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் வங்கதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்திருந்தது.

மோமினுல் ஹக் 37, லிட்டன் தாஸ் (0) இருவரும் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். மோமினுல் 41 ரன் எடுத்து அப்ரிடி வேகத்தில் வெளியேறினார். அடுத்து வந்த ருபெல் உசேன் 5, அபு ஜாயித் 3 ரன்னில் பெவிலியன் திரும்பினர். லிட்டன் தாஸ் 29 ரன் (59 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி யாசிர் ஷா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, வங்கதேசம் 2வது இன்னிங்சில் 168 ரன்னுக்கு சுருண்டது. பாக். பந்துவீச்சில் நசீம் ஷா, யாசிர் ஷா தலா 4, அப்ரிடி, அப்பாஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 44 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றது.


Tags : Pakistan ,innings ,Bangladesh , Pakistan beat, Bangladesh , 44 runs
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்