×

இன்று 3வது ஒருநாள் போட்டி ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா? : ஒயிட் வாஷ் முனைப்பில் நியூசிலாந்து

மவுன்ட் மவுங்கானுயி: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, பே ஓவல் மைதானத்தில் இன்று காலை 7.30க்கு தொடங்குகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் விளையாடிய டி20 தொடரில் 5-0 என்ற கணக்கில் அபாரமாக வென்று ஒயிட்வாஷ் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. ஹாமில்டனில் நடந்த முதல் போட்டியில் 4 வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து, ஆக்லாந்தில் நடந்த 2வது போட்டியில் 22 ரன் வித்தியாசத்தில் வென்று 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் 3வது ஒருநாள் போட்டி மவுன்ட் மவுங்கானுயி, பே ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்த கோஹ்லி & கோ வரிந்துகட்டுகிறது. தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா, அகர்வால் கணிசமாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கேப்டன் கோஹ்லி, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் நல்ல பார்மில் இருந்தாலும், பெரிய ஸ்கோர் அடித்தால் மட்டுமே நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

பெரிய அளவில் கை கொடுக்காத ஆல் ரவுண்டர் கேதார் ஜாதவுக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பன்ட்டுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பந்துவீச்சில் ஜடேஜா, சைனி, சாஹல் சிறப்பாகப் பங்களித்துள்ள நிலையில், வேகப் பந்துவீச்சாளர்கள் ஷர்துல் தாகூர், பூம்ரா அதிக ரன் விட்டுக்கொடுப்பது அணிக்கு சற்று பின்னடைவை கொடுத்துள்ளது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப ஷமி, குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயாராகி இருப்பதால் நியூசி. அணி உற்சாகம் அடைந்துள்ளது. ரிசர்வ் வீரர்களாக ஈஷ் சோதி, பிளேர் டிக்னர் சேர்க்கப்பட்டுள்ளனர். ராஸ் டெய்லர், கப்தில், நிகோல்ஸ் கணிசமாக ரன் குவித்து வரும் நிலையில், வில்லியம்சன் இணைந்திருப்பது நியூசி. பேட்டிங் வரிசையை மேலும் பலப்படுத்தி உள்ளது.

ஆறுதல் வெற்றிக்காக இந்தியாவும், ஒயிட்வாஷ் செய்ய நியூசிலாந்தும் முனைப்புடன் உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.
இந்தியா: கோஹ்லி (கேப்டன்), பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால், கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே, ரிஷப் பன்ட், ஷ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே, ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், முகமது ஷமி, பூம்ரா, ஷர்துல் தாகூர், சைனி. நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம், மார்டின் கப்தில், ராஸ் டெய்லர், கோலின் டி கிராண்ட்ஹோம், ஜிம்மி நீஷம், ஸ்காட் குகலெஜின், டாம் பிளண்டெல், நிகோல்ஸ், சான்ட்னர், ஹமிஷ் பென்னட், டிம் சவுத்தீ, கைல் ஜேமிசன், ஈஷ் சோதி, பிளேர் டிக்னர்.

* பே ஓவல் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
* இந்திய அணி கடைசியாக 1989 வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் 5-0 என ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்துள்ளது.
* பே ஓவல் மைதானத்தில் இந்தியா விளையாடி உள்ள 2 போட்டியிலும் வென்றுள்ளது.

Tags : India ,New Zealand , Will India ,win, 3rd ODI today
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...