×

கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு வாகன விற்பனை கடும் சரிவு : ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அறிக்கை

புதுடெல்லி: கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு, பயணிகள் வாகன விற்பனை கடந்த ஜனவரியில் கடும் சரிவை சந்தித்துள்ளது. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ஆட்டோமொபைல் துறையும் ஒன்று. இதுபோல், பாதுகாப்பு விதிகள், பிஎஸ் 6 தர வாகனங்களுக்கு மாற வேண்டிய சூழ்நிலை போன்றவற்றால் மேலும் நிதிச்சிக்கலுக்கு இந்த துறை ஆளானது. அதிலும், பொருளாதார மந்த நிலை காரணமாக வாகன விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனால் வாகன டீலர் ஷோரூம்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டன. 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர். இந்த சூழ்நிலையில், கடந்த ஜனவரி மாதத்திலும் வாகன விற்பனை சரிந்துள்ளது. இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயணிகள் வாகனங்கள், வணிக பயன்பாட்டு வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், டூவீலர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து கடந்த ஜனவரியில் 2,151,544 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு ஜனவரியில் 2,405,883 ஆக இருந்தது.  

வணிக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் சரிந்து, 75,289 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியில் இது 87,591 ஆக இருந்தது. டூவீலர் விற்பனை 16 சதவீதம் சரிந்துள்ளது. 1,341,005 டூவீலர்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியில் இது 1,597,528 ஆக இருந்தது. அதேநேரத்தில் மூன்று சக்கர வாகன விற்பனை மட்டும் 13 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு ஜனவரியில்  54,043 வாகனங்கள் விற்பனையான நிலையில், கடந்த ஜனவரியில் 60,903 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.  பயணிகள் வாகன விற்பனை 6.2 சதவீதம் சரிந்து 262,714 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இது தொடர்ந்து 3வது மாதமாக ஏற்பட்ட சரிவாகும். அதோடு, கடந்த 4 மாதங்களில் இல்லாத கடும் விற்பனை சரிவாக பார்க்கப்படுகிறது. உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் 2,380,699 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது இதற்கு முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில்  2,813,285 ஆக இருந்தது.

இதுபோல், வணிக பயன்பாட்டு வாகனங்கள் 645,991  (முந்தைய ஆண்டு (810,853 வாகனங்கள்), மூன்று சக்கர வாகனங்கள் 567,659 (முந்தைய ஆண்டு 574,856 ), டூவீலர்கள் விற்பனை 15,255,979 (முந்தைய ஆண்டு 18,124,313) என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கத்தின் (சியாம்) தலைவர் ராஜன் வதேரா கூறுகையில், ‘‘மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மந்த நிலை, வாகன விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஊரக பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளது. இதன்மூலம் வாகனங்களின் விற்பனை, குறிப்பாக வணிக பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் டூவீலர்கள் விற்பனை உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், சமீபத்தில் நடந்த ஆட்டோ கண்காட்சி நுகர்வோரிடையே வரவேற்பை பெற்றுள்ளது. எனவே வரும் மாதங்களில் விற்பனை உயரும் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும், பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்குவோருக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும்’’ என்றார்.

Tags : Auto sales ,plummeted , past four months
× RELATED ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; இன்று...