×

மத்திய அரசின் எஸ்சி, எஸ்டி சட்டத்திருத்தம் செல்லும் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: கடந்த 2018ல் மத்திய அரசு நிறைவேற்றிய எஸ்சி, எஸ்டி சட்டத்திருத்தம் செல்லும் என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “பாதிக்கப்பட்டவர்கள் எஸ்சி, எஸ்டி சட்டத்தின்கீழ் புகார் அளித்தால் அவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. மேலும், புகார் குறித்து தீவிர விசாரணைக்கு பின்னரே அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என கடந்த ஆண்டு மார்ச் 20ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் வகையில் உள்ளது எனக்கூறி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தன. மேலும் குறிப்பாக வட மாநிலங்களில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் கடும் அழுத்தத்துக்கு உள்ளான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எஸ்சி, எஸ்டி சட்டத்தில் திருத்தம் செய்து அதை அவசரமாக நிறைவேற்றியது. அதன்படி, வன்கொடுமை சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் பெற முடியாது என்றும், உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டது. மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம், “எஸ்சி, எஸ்டி சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த உத்தரவில் சில அம்சங்களை திரும்ப பெறுவதாகவும், அதாவது குறிப்பாக எஸ்சி, எஸ்டி சட்டத்தின்கீழ் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தாலே குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்யக்கூடாது என்ற முந்தைய உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. மேலும் எஸ்சி, எஸ்டி சட்டத்தின்கீழ் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தாலே கைது செய்யலாம் என சட்டத்தில் இடம் உள்ளது என்பதால் அதுபோன்று நடவடிக்கை எடுக்க எந்த தடையும் கிடையாது. இருப்பினும் கைது செய்யப்படுபவர்கள் மீது எஸ்சி. எஸ்டி சட்டப்பிரிவின்கீழ் எந்த அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தீர ஆராய்ந்த பிறகு அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து விசாரணை அதிகாரிகளோ அல்லது நீதிமன்றமோ தங்களது முடிவை மேற்கொள்ளலாம்’’ என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து எஸ்சி, எஸ்டி சட்டத் திருத்தத்தில் சில அம்சங்களை திரும்பப் பெற்றதற்கு எதிராக மூன்று பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அதனை விசாரித்து அனைத்து வாதங்களையும் முடித்த நீதிமன்றம் தீர்ப்பை மட்டும் தேதி குறிப்பிடாமல் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், “எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 2018ல் செய்யப்பட்ட திருத்தம் அரசியலமைப்பின்படி செல்லும். மேலும் அத்துடன், இந்த வழக்கில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய முன்விசாரணை எதுவும் தேவையில்லை. குறிப்பாக அரசு ஊழியர்களை கைது செய்வதாக இருந்தாலும் உயரதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அதேசமயம் எஸ்சி, எஸ்டி சட்டத்தின்கீழ் ஒரு முதன்மை வழக்கு தொடரப்படாவிட்டால், நீதிமன்றத்தால் அதனை ரத்து செய்ய முடியும். மேலும் எந்த ஒரு வழக்கிலும் முன்ஜாமீனை தாராளமாக பயன்படுத்துவது என்பது நாடாளுமன்றத்தின் நோக்கத்தை சிதைப்பது போன்றதாகும்’’ என தீர்ப்பளித்த நீதிபதிகள் சட்ட திருத்தத் திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டனர்.

Tags : government ,Supreme Court ,SD ,SC , Central government, SC, SD legislation , Supreme Court action ruling
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்