×

4 ஆஸ்கர் விருது வென்றது பாரசைட்

லாஸ்ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் தென்கொரிய படமான பாரசைட் 4 விருதுகளை வென்றது. 92வது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டரில் நேற்று நடைபெற்றது. கோலாகலமாக நடந்த இந்த விழாவில் ஹாலிவுட் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் சிறந்த படத்துக்கான போட்டியில் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட், 1917, ஜோக்கர், பாரசைட் உள்ளிட்ட படங்கள் களத்தில் இருந்தன. இதில் பாராசைட் தென்கொரியா படம். மற்றவை ஹாலிவுட் படங்கள். வழக்கம்போல் ஹாலிவுட் படம்தான் இந்த முறையும் சிறந்த படமாக தேர்வாகும் என கணிக்கப்பட்டது. ஆனால் அந்த ஹாலிவுட் படங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு போங் ஜோன் ஹோ இயக்கிய பாரசைட் சிறந்த படமாக தேர்வானது. அத்துடன் சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு படம் என மொத்தம் 4 விருதுகளை பாராசைட் வென்றது.

விருது பட்டியல் விவரம்: சிறந்த படம் - பாரசைட். சிறந்த இயக்குநர் - போங் ேஜான் ஹோ (பாரசைட்). சிறந்த நடிகர் - ஜோக்கின் பீனிக்ஸ் (ஜோக்கர்). சிறந்த நடிகை - ரெனி ஜெல்வெகர் (ஜுடி).  துணை நடிகர் - பிராட் பிட் (ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்).  துணை நடிகை - லாரன் டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி). . திரைக்கதை - போங் ஜோன் ஹோ மற்றும் ஹான் ஜின் (பாரசைட்). தழுவல் திரைக்கதை - டைகா வைட்டி (ஜோஜோ ராப்பிட்). அனிமேஷன் திரைப்படம் - டாய் ஸ்டோரி 4. வெளிநாட்டு திரைப்படம் - பாரசைட் (தென்கொரியா).

ஆவணப்படம் - அமெரிக்கன் பேக்டரி. ஆவண குறும்படம் - லியர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் எ வார்ஜோன். லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - தி நைபர்ஸ் விண்டோ. அனிமேஷன் குறும்படம் - ஹேர் லவ். பின்னணி இசை - ஜோக்கர். சிறந்த பாடல் - லவ் மி அகெய்ன் (ராக்கெட்மேன்). ஒலி தொகுப்பு - ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி. ஒலிக்கலவை - 1917. தயாரிப்பு வடிவமைப்பு - ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட். ஒளிப்பதிவு - ரோஜர் டிக்னஸ் (1917). ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் - சார்லிஸ் தெஹரன், நிக்கோல் கிட்மென், மோர்கட் ராப்பி (பாம்ஷெல்). ஆடை வடிவமைப்பு - லிட்டில் உமன். படத்தொகுப்பு - மாட்டாமன், கிரிஸ்டியன் பாலே (ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி). விஷுவல் எஃபெக்ட்ஸ் - 1917.

பாரசைட் கதை என்ன?

ஹாலிவுட் படங்களுக்கு சவால் விட்டு 4 விருதுகளை அள்ளிய பாரசைட் தென்கொரிய படத்தின் கதைச் சுருக்கம்: சாக்கடை நிறைந்த பகுதியில் சிறு வீட்டில் வாழ்கிறது கிம் குடும்பம். கிம்முக்கு ஒரு மகன், ஒரு மகள். படிப்பை முடித்திருக்கும் கிம் மகன், வேலைக்கு சென்றால்தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலை. கிம் மகனின் நண்பன் தரும் ஐடியாவின் படி, பார்க் என்ற செல்வந்தரின் வீட்டில் டியூஷன் டீச்சராக செல்கிறான் கிம் மகன். இந்த வேலைக்கு தகுதியற்ற அவன், போலி சான்றிதழ்களை காட்டித்தான் வேலையில் சேர்கிறான். தொடர்ந்து கிம்மின் குடும்பமே அந்த வீட்டுக்குள் வெவ்வேறு வேலைக்கு சேருகிறார்கள். தாழ்வு மனப்பான்மை காரணமாக கிம், வன்முறையை கையில் எடுக்கிறார். இதன் விளைவாக கிம் குடும்பமும் பார்க் குடும்பமும் பல்வேறு இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இதை காமெடியுடன் உணர்வு பூர்வமாக படம் சொல்கிறது.

Tags : Parasite , Parasite won, 4 Oscars
× RELATED தென்கொரிய நடிகர் மர்ம மரணம்