×

மதமாற்றம் தொடர்பான விவகாரத்தில் சட்டம் இயற்ற மாநில அரசுக்குதான் அதிகாரம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மத மாற்றம் செய்வது தொடர்பான விவகாரத்தில் அதனை தடுக்கும் விதமாக சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்குதான் முழு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் மதமாற்றம்,  பக்கத்து மாநிலமான கேரளாவை மிஞ்சும் அளவிற்கு நடந்து வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. தென் தமிழகம் மற்றும் நெல்லையை குறிவைத்துதான் அதிக அளவு மதமாற்றம் நடைபெறுவதாக காவல்துறையில் புள்ளி விவரங்களோடு  புகார் அளிக்கப்பட்டு வரப்படுகிறது. மேலும் இந்து அமைப்புகளும், தொடர்ந்து பல்வேறு வழிகளில் மதமாற்றம் நடைபெறுவதாகவும், இதனை தடுக்க முறையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசிடம் வலியுறுத்தி  வருகின்றன.வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “தமிழகத்தில் அதிகப்படியாக மதமாற்றம் நடைபெறுவதாகவும், இதனை தடுக்க மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அதற்காக வலுவான சட்ட விதிகளையும் ஏற்படுத்த தவறிவிட்டது. குறிப்பாக பிற  மாநிலங்களில் மதமாற்றத்திற்கு எதிராக சட்ட விதிகள் கடுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு தமிழக அரசுக்கு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கு,  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் வினீத் சரண் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் ஜெய்சுகின், மனுவில் உள்ள சாராம்சங்களையும், மாநில அரசு காட்டும் அலட்சியங்களையும் நீதிபதிகள்  முன்னிலையில் எடுத்துரைத்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதுகுறித்து நாங்கள் (நீதிமன்றம்) எதுவும் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தில் சட்ட விதிகளை உருவாக்க மாநில  அரசுக்குதான் முழு அதிகாரம் உள்ளது என தெரிவித்து, அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Tags : state government ,Supreme Court ,conversion , Conversion, Law, State Government, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...