×

அன்புச் செழியனுக்கு வருமான வரித்துறை சம்மன்: 12, 13ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச் செழியன், விநியோகஸ்தர் சுந்தர் ஆகியோர் 12 அல்லது 13ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த வாரம்  38 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சென்னையில் ஏஜிஎஸ் சினிமா பட தயாரிப்பு நிறுவன உரிமையாளர் அகோரம், பைனான்சியரும் அதிமுக பிரமுகருமான அன்புச்செழியன், விநியோகஸ்தர் சுந்தர் ஆகியோரின்  வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது.  மூன்று நாட்கள் நடந்த இந்த சோதனையில், அன்புச் செழியனின் சென்னை மற்றும் மதுரையில் உள்ள வீடுகளில் இருந்து, கணக்கில் வராத 77 கோடி ரொக்கம், ஒரு கோடி அளவுக்கு இரண்டு  பைகள் நிறைய தங்க, வைர நகைகள் மற்றும் 300 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.

பைனான்சியர் அன்புச்செழியன் தன்னுடைய பணத்தை ரகசியமாக  பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல  இடங்களில் இவர் பணம், ஆவணங்களை பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்துள்ளது. அதனால் தான்  வருமான  வரித்துறையினர் அவருக்கு சொந்தமான இடங்களை பொறி வைத்து சோதனை மேற்கொண்டதற்கான காரணம். அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி வருமான வரித்துறையினர் அழைத்தும் இதுவரை அவர் ஆஜராகவில்லை.  இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வருகிற 12 அல்லது 13ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பைனான்சியர் அன்பு செழியனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 77 கோடி பணம்  பதுக்கி வைத்தது குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அவர் முன்பே முறையாக கணக்கு காட்டியிருந்தால் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கும்.

தற்போது பணம் சிக்கியுள்ளதால் 70 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில் தனியாக வழக்கும்பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், கல்பாத்தி எஸ்.அகோரம், ஏஜிஎஸ் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்புவது குறித்து ஓரிரு  நாளில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் பிகில் படத்தை வாங்கி விநியோகம் செய்த ‘‘ஸ்கிரீன் கிரீன்’’ உரிமையாளர் சுந்தரும் 12 அல்லது 13ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன்  அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Income Tax department ,Dhanush Cheliyan , Dear Sir, Income Tax Department, Samman
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...