×

தலைநகரில் யார் ஆட்சி அமையும்?: டெல்லி சட்டசபை தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை...தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8ம் தேதி தேர்தல்  நடத்தப்படும் என்றும் 11ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவித்தது. அதன்படி, டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 8ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி  தனித்து நின்று அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. பாஜக 67 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 66 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணி கட்சியான லாலுவின்  ராஷ்ட்ரிய  ஜனதா தளம்  கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

தேர்தலின் போது 62.59 சதவீதம் வாக்கு பதிவானதாக தேர்தல் ஆணையம் றேந்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், வாக்குப் பதிவுக்கு பிறகு சில ஊடகங்கள், மற்றும் தனியார் அமைப்பினர் சிலர் வாக்காளர்களிடம்  நடத்திய ஆய்வில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் குறைந்த அளவிலான இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும், தற்போது ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி அதிக அளவில் இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக  ஒரு தேர்தல் கணிப்பை வெளியிட்டுள்ளன.

இதன்படி இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த கட்சியின் சரிவு ஆம்ஆத்மி கட்சியை மேலே தூக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் மூலம் 8.8 சதவீதம் வாக்குகள் ஆம் ஆத்மி கட்சிக்கு  கூடுதலாக கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல பாஜக சார்பில் அதிக அளவில் முக்கிய தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், தனது வாக்குவங்கியை ஓரளவுக்கு தக்க வைத்துக்  கொண்டதாகவும் தெரிகிறது. காங்கிரசின் பின்னடைவு என்பது பாஜகவுக்கும் சாதமாக இருந்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் கணிப்புகளின் அடிப்படையில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிகிறது. கடந்த 2015ம் ஆண்டு தேர்தலின் போது, மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம்ஆத்மி கட்சி 67 இடங்களை பிடித்து ஆட்சிக்கு  வந்தது. இப்போது வெளியான தேர்தல் கணிப்புகளால் மீண்டும் ஆம்ஆத்மி கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை தொடங்க உள்ளது. நாளை பிற்பகல் டெல்லியில்  எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது தெரியவரும். இதற்கிடையே, மீண்டும் ஆட்சி நமக்குதான் என்ற கண்ணோட்டத்துடன் ஆம் ஆத்மி கட்சியினர் தயாராகி வருகின்றன. ஆனால், தலைநகர் டெல்லியில் ஆட்சியை பிடிக்க மத்திய உள்துறை  அமித்ஷா கணக்கு போட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.


Tags : capital ,Delhi ,Delhi Assembly , Who will rule in the capital ?: Delhi Assembly polls tomorrow
× RELATED ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்...