×

புதிதாக ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு அனுமதியில்லை என முதல்வர் குழப்பமான அறிவிப்பு: 274 எண்ணெய் கிணறுகள் பணி நிறுத்தப்படுமா?...பழைய ஒப்பந்தம் ரத்து ஆகுமா என டெல்டா விவசாயிகள் கேள்வி

திருச்சி: புதிதாக ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு அனுமதியில்லை என முதல்வர் குழப்பமான அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், ஏற்கனவே போட்ட ஒப்பந்தத்தின்படி நடைபெற்று வரும் 274 எண்ணெய் கிணறுகள் பணி நிறுத்தப்படுமா என்று டெல்டா விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். காவிரிப் படுகையை 2 மண்டலங்களாகப் பிரித்து மொத்தம் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. பிரிவு 1ல், விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள், பிரிவு 2ல் கடலூர் முதல் நாகை வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக வேதாந்தா, ஓஎன்ஜிசி, ஐஓசி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. ஹைட்ரோ கார்பன் எடுக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மத்திய அரசு இறங்கியது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என்று விவசாயிகள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது. திட்டத்திற்கு எதிராகவும், திட்டத்தை கைவிட கோரியும் விவசாயிகள், பொதுமக்கள் வயல்களில் இறங்கி போராட்டம், மனித சங்கிலி, ரயில் மறியல், உண்ணாவிரதம் என்று தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதற்கு ஆதரவாக மாணவர்கள், பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து ஹைட்ேரா கார்பன் எடுப்பதற்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக அமைச்சர்கள் டெல்டாவில், ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர். மத்திய அமைச்சரும் மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வர மாட்டோம் என்று கூறினார். ஆனால் இப்போது, ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக 5வது ஏலத்திற்கான அறிவிப்பு கடந்த மாதம் 15ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்காக மார்ச் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19,789 சதுர கிமீ பரப்பளவில் 11 ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான உரிமங்கள் இந்த 5வது ஏலத்தில் வழங்கப்பட உள்ளன. இவற்றில் 4,064.22 சதுர கிமீ பரப்பளவு உள்ள ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட இருக்கிறது. புதுச்சேரியில் தொடங்கி காரைக்கால் வரையிலான ஆழ்கடல் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடலூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் விவசாயிக் மட்டுமல்லாமல் மீனவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

முதல்வர் அறிவிப்பு

இந்நிலையில், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நேற்று நடந்த அரசு விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர், அரியலூர், கரூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார். விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டமும் இனி டெல்டா மாவட்டங்களில் வராது. இப்பகுதியில் புதிதாக ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் தொடங்குவதற்கான அனுமதியை வழங்க மாட்டோம். ஏற்கனவே, நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் பணிக்கு மத்திய அரசுதான் அனுமதி வழங்கி உள்ளது. மாநில அரசு தடையில்லா சான்று வழங்கவில்லை என்றார். முதல்வரின் அறிவிப்பு படி பார்த்தால் ஐஓசி, ஓஎன்ஜிசி, மற்றும் வேதாந்தா இதுதவிர வெளிநாட்டு கம்பெனிகளும் வெளியேறுமா என்பது தெரியவில்லை. இனி அனுமதி தரமாட்டோம் என அவர் கூறியுள்ளதால் இந்த நிறுவனங்கள் ஏலம் எடுத்த 95 ஆயிரம் சதுர கி.மீ.பரப்பில் பணிகள் நடக்குமா அல்லது இவற்றை வெளியேற்றுவார்களா என்பது தெளிவாக இல்லை. இனி புதிதாக அங்கு ஏலம் விட இடமே கிடையாத அளவுக்கு ஏலம் முடிந்து விட்டது. தடையில்லா சான்று வழங்கவில்லை என கூறும் முதல்வர், டெல்டாவில் நடக்கும் பணிகளை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என கேள்வி எழுகிறது. முதல்வரின் இந்த அறிவிப்பை டெல்டா மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள் முதல்வர் அறிவிப்பை கேட்ட பின்னரும் மகிழ்ச்சி அடையவில்லை.

முதல்வர் ஒரு பெரிய திட்டத்தை அறிவிக்கிறார் என்றால் அது குறித்து அந்த துறையின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுடன் கலந்து ஆலோசித்து தான் அறிவித்து இருப்பார். ஆனால் இது குறித்து டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் கேட்டபோது இது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் இதுவரை வரவில்லை என்ற தகவலையே தெரிவிக்கிறார்கள். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இதுவரை 5 ஏலம் நடந்துள்ளது. இதை ஏலம் எடுத்தவர்கள் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் முதல்கட்ட பணியை தொடங்கி உள்ளனர். இவர்கள் தமிழக அரசின் சட்டத்தை ஏற்று வெளியேறுவார்களா, அல்லது மத்திய அரசுதான் எங்களை அனுமதித்தது என்று கூறி வெளியேற மறுத்து கோர்ட்டை நாடுவார்களா என்பது கேள்விக்குறி. இதுவரை நாங்கள் யாருக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கவில்லை என முதல்வர் கூறிய நிலையில் நிலம் கையப்படுத்தும் பணியில் தமிழக வருவாய்த்துறையினர் எப்படி ஈடுபட்டனர். ஹைட்ரோ கார்பன் நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது எப்படி என்ற கேள்விகளும் எழுகிறது. இதற்கெல்லாம் முதல்வர் விரைவில் விளக்கம் அளிப்பார் அல்லது சட்டமன்றத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

9ம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதித்து வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் இன்னும் நம்ப முடியாததாகவே உள்ளது. இதுகுறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறியதாவது: முதல்வர் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இதை அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவாக அறிவித்திருக்க வேண்டும். தனிப்பட்ட முதல்வர் அறிவிப்பு என்பது வேறு. கொள்கை முடிவு என்பது வேறு. இப்போதும் அதற்கு காலம் முடிந்து விடவில்லை. இன்றைக்கே அமைச்சரவையை கூட்டி அறிவிக்கலாம். அல்லது 14ம் தேதி கூடும் சட்டமன்ற கூட்டத் தொடரில் சட்டம் இயற்றி விடலாம். சட்டம் இயற்றாவிட்டால் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த சட்டம் மத்தியஅரசின் ஒப்புதலுக்கு செல்லும்போது தமிழக எம்.பிக்கள் இதற்கு குரல் கொடுக்க வேண்டும். காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கூறியதாவது: முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறோம்.

Tags : Chief Minister ,announcement , Hydrocarbon, methane, CM, oil wells, contract, delta farmers
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...