×

லால்குடி பகுதியில் அறுவடை நேரத்தில் தண்டு குலை நோய் தாக்கத்தால் பதரான 800 ஏக்கர் நெற்பயிர்

லால்குடி: லால்குடி பகுதியில் குலை நோய் புகையான் தாக்கியதால் சுமார் 800 ஏக்கர் நெற்பயிர்கள் பதரானது. இதனால் நஷ்டம் அடைந்த விவசாயிகள் கண்ணீரில் உள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம், லால்குடி, புள்ளம்பாடி, பகுதியில் சம்பா சாகுபடி செய்து தற்போது அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில் புள்ளம்பாடி பகுதியில் புஞ்சைசங்கேந்தி, நஞ்சைசங்கேந்தி, வெள்ளனூர், லால்குடி பகுதியில் பெருவளநல்லூர், பல்லபுரம், ஆகிய பகுதிகளில் பெருவளவாய்க்கால் மூலம் பாசனம் பெற்று 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பா சாகுபடி நெற்கதிர்கள் முற்றி சில இடங்களில் அறுவடை செய்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் சுமார் 800 ஏக்கருக்கு மேல் அறுவடைக்காக காத்திருக்கும் நெல் கதிர்கள் சாய்ந்து காணப்பட்டுள்ளது. இதில் கோ 50, தன்வி, கோ 51, ஆகிய நெல் ரகங்களில் பழ நோய், குலை நோய் தாக்கியதால் நெல் மணிகள் பதராக காணப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா பொன்னி நடவு செய்த பகுதிகளில் குலை நோய் முற்றிலும் தாக்கப்பட்டு நெல் மணிகள் 70 சதவீதம் பதராக மாறியுள்ளது.

விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலரிடம் தெரிவித்தும், வேளாண் துறை அலுவலர்கள் ஆலோசனை படி மருந்துகள் தெளித்தும் போதிய பயனில்லை. முற்றிலுமாக நோய்கள் தாக்கப்பட்டு தற்போது பதராக காணப்படுகிறது. மேலும் குலை நோய் புகையான் தாக்கியதால் சேதமடைந்த நெற்பயிர்கள் மட்டுமல்லாது வைக்கோல் கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.28 ஆயிரம் வரை செலவு செய்து தற்போது ஏக்கருக்கு 30 சதவீதம் கூட நெல் மணிகள் மகசூல் கிடைக்கவில்லை. மேலும் விவசாயிகள் தேசிய வங்கிகளிலும், கூட்டுறவு வங்கிகளிலும், விவசாய கடன் பெற்றும், தங்கள் நகைகளை அடமானம் வைத்தும் விவசாயம் செய்துள்ளனர். 70 சதவீதம் விவசாயிகள் பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில் மூலம் காப்பீடு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் காப்பீடு செய்யாத நிலையில் உள்ளனர். பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் லால்குடி பகுதியில் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Lalukudi , Lalgudi, Harvesting, Disease, Acre, Paddy Crop
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...