×

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா பாதித்த 6வது முறையாக உமிழ்நீர் பரிசோதனை

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட திருச்சூர் மாணவியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்தியாவிலேயே முதன்முதலாக கொரேனா வைரஸ் பாதிப்புக்குள்ளான மாணவி கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஆவார். சீனாவில் உள்ள வூகான் மருத்துவ பல்கலை கழகத்தில் இவர் படித்து வந்தார். கடந்த மாதம் தான் கேரளாவுக்கு திரும்பினார். இருமல், காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து திருச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்காக பூனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் மாணவிக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கடந்த 30ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். இதன்பிறகு ஆலப்புழா மற்றும் காசர்கோட்டை சேர்ந்த 2 மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் 3 பேருமே சீனாவில் உள்ள வூகான் மருத்துவகல்லூரியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே இவர்கள் 3 பேருக்கு மட்டும் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதற்கிடையே சீனாவில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்கள் அனைவரையும் மருத்துவ கண்காணிப்பில் வைக்க தீர்மானிக்கப்பட்டது. இவர்களில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் இதுவரை 90க்கும் ேமற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் யாருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இதேபோல் சுமார் 3 ஆயிரம் பேர் அவர்களது வீடுகளிலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சூரில் சிகிச்சை பெற்று வந்த மாணவியின் 5வது உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வந்தது.

இதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. கடந்த 8ம் தேதி 6வதாக இந்த மாணவியின் உமிழ்நீர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவு இன்று அல்லது நாளை வரும்.  இதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்தால் மாணவி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும், தற்போது மாணவியின் உடல்நிலை தேறி வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags : India , India, Corona, Saliva Experiment
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...