×

பாரதிபுரம்- வெண்ணாம்பட்டியை இணைக்கும் ரயில்வே மேம்பால பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தர்மபுரி: தர்மபுரி அருகே பாரதிபுரம்- வெண்ணாம்பட்டி பகுதியை இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற பல்லாண்டு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்திலேயே மேம்பாலம் இல்லாத நகராட்சியாக தர்மபுரி இருந்தது. இதனால் ரயில்வே கேட் மூடப்படும் போது, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது வாடிக்கையாக இருந்தது. பொதுமக்களின் பல்லாண்டு கோரிக்கையை, முன்னாள் திமுக எம்பி தாமரைசெல்வன், அப்போதைய மத்திய ரயில்வே மந்திரியிடம் தெரிவித்தார். இதன் அடிப்படையில், மத்திய அரசு அதியமான்கோட்டை, குமாரசாமிபேட்டை, கடகத்தூர் ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கி, கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

வெண்ணாம்பட்டி ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டுவதற்காக, 4 முறை மண் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் மேம்பாலம் அமைத்தால் ஏராளமான வீடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே ரயில் நிர்வாகம் பாரதிபுரத்தையும், வெண்ணாம்பட்டியையும் இணைக்கும் இடத்தில் உள்ள 66 அடி ரோட்டில் மேம்பாலம் கட்ட, 3 முறை மண்பரிசோதனை நடத்தியது. ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் எந்த பணிகளும் நடக்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: வெண்ணாம்பட்டி, ஆயுதப்படை குடியிருப்பு, நியூகாலனி, வி.ஜெட்டிஅள்ளி, குள்ளனூர், பட்டாளம்மன் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர். இங்கிருந்து, தர்மபுரி நகருக்கு வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் வழியாகவே பல்வேறு பணிகளுக்கு மக்கள் செல்கின்றனர். ரயில்வே கேட் தினமும் 20 முறைக்கும் மேல் மூடப்படுகிறது.

அப்போது, வாகனங்கள் வரிசையாக நிற்பதால், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் வெண்ணாம்பட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் அல்லது பாரதிபுரத்தை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் எங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. வெண்ணாம்பட்டி ஆயுதப்படைக்கு எதிரே உள்ள பாரதிபுரம் 66 அடி ரோட்டை இணைக்கும் வகையில், ரயில்வே மேம்பாலம் அமைத்தால் தர்மபுரி நகருக்கும், கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களுக்கும் செல்ல வசதியாக இருக்கும். இந்த சாலையில் ஆக்கிரமிப்புகளும் கிடையாது.

இதில் 66 அடியில் 6 அடி போக 60 அடி சாலையில் 20 அடிக்கு மேம்பாலம் அமைக்க இதுவரை எந்த நிதியும் ரயில்வே நிர்வாகம் ஒதுக்கவில்லை. விரைவில் போதிய நிதியை ஒதுக்கி, வெண்ணாம்பட்டியில் இருந்து பாரதிபுரம் 66 அடி ரோட்டை இணைக்கும் வகையில், ரயில்வே மேம்பாலத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : railway ,Bharathipuram - Vanna Pattam Railway Improvement: Implementation of Public Expectations Bharathipuram - Vennampatti , Bharathipuram - Vennampatti Railway Improvement Project
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே...