×

எங்கும் குப்பை, மதுபாட்டில்கள் திறந்தவெளி மதுபான கூடமாக மாறிய மெரினா: திடீரென முளைத்த சைடீஷ் கடைகள்

புதுச்சேரி: பாண்டி மெரினா புதுச்சேரியின் மிகப்பெரிய மதுபான கூடமாக மாறிவிட்டதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். எங்கும் குப்பை, மதுபான பாட்டில்கள் குவியலால் அலங்கோலமானது. புதுச்சேரியில் மத்திய சுற்றுலாத்துறை நிதியுதவியுடன் பாண்டி மெரினா, அரியாங்குப்பம், வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், ஈடன் கடற்கரை, அரிக்கன்மேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரை  ரூ. 70  கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.  அதன்படி திப்புராயப்பேட்டையில் அமைக்கப்பட்டு வரும், பாண்டி மெரினாவில் மீன், சங்கு, முத்து அருங்காட்சியகத்துடன் கூடிய சுற்றுலா காம்ப்ளக்ஸ் கட்டும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. அதேபோல் லைட் அவுஸ் அருகே, பரந்து விரிந்துள்ள அழகிய மணற்பரப்பில், பாண்டி மெரினா பீச்’ என்ற பெயரில் புதியகடற்கரை உருவாக்கும் பணி மீதமுள்ளது. ரூ. 4 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா வளாகம் அழகிய பிரெஞ்சு கட்டிட கலை நயத்துடன் காணப்படுகிறது.

இதற்கான சாலை, உயர் மின்விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் உணவு அரங்கம் உள்ளிட்ட 36 கடைகள் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில்  பாண்டி மெரினா பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் கவர்னர் கிரண்பேடி மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்.  தொடர்ந்து இப்பகுதிகளில் அடிக்கடி ஆய்வு செய்யும் கவர்னர் அங்கு குவிந்துகிடந்த குப்பைகளை அகற்றுவது வழக்கம். கடந்த முறை ஆய்வின் போது  சூரிய மின்விளக்குகள், மழை நீர் சேகரிப்பு அமைப்பு, கழிவறைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்தாண்டு ஜூலை மாதத்துக்குள் அனைத்து பணிகளை யும்முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாண்டி மெரினா பகுதி ஒதுக்குப்புறமாக இருப்பதால், இப்பகுதியை சுற்றுலாபயணிகள், பொதுமக்கள் திறந்த வெளி மதுபான கூடமாக மாற்றியுள்ளனர்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பகுதிக்கு வருவோர், மதுபானங்களை அருந்தி விட்டு கண்ட இடங்களில் பாட்டில்களையும், பிளாஸ்டிக் கவர்களையும் வீசியெறிகிறார்கள். என்ன நடந்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்பதால், அப்பகுதியில் குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மிகுந்த சுத்தமாக இருந்தது. பாண்டி மெரினா என வெளியே தெரிந்தவுடன் அப்பகுதியும் சீரழிய ஆரம்பித்துவிட்டது, கஞ்சா புகைப்பவர்கள், மது அருந்துபவர்களின் சொர்க்கபுரியாக தற்போது  மாறிவிட்டது. மாலை நேரம் ஆரம்பித்தால்  படையெடுக்கும் இளைஞர் கூட்டத்திடம் அப்பகுதி வந்துவிடுகிறது. காவல்துறை ரோந்து சென்றால் மது அருந்துபவர்கள் மதிப்பதில்லை. போதையில் பாட்டிலால் தாக்க வருவதால், போலீசாரும் அமைதியாக திரும்பி வந்து விடுகின்றனர். வெளியூரிலிருந்து சுற்றுலா வருபவர்களிடம் நாகரீகமாக நடக்க  வேண்டும் என்பதால்,  இவ்விஷயத்தில் போலீசார் அமைதி காக்கின்றனர்.

நாளடைவில் அப்பகுதிக்கு ரோந்து செல்வதை விட்டு விட்டதால், கடற்கரை முழுக்க ஆயிரக்கணக்கான பாட்டில்கள் குவியலும், பிளாஸ்டிக் பைகள், கிளாஸ்களால் அழகிய கடற்கரை அலங்கோலமாக மாறிவிட்டது. குடிமகன்களின் வருகை அதிகரிப்பால் திடீர் சைடீஸ் கடைகளும் தற்போது முளைக்க ஆரம்பித்துள்ளது. பாட்டில்களை அப்படியே வீசுவதற்கு பதிலாக கண்ட இடங்களில் உடைத்து வீசி வருகின்றனர். மின்விளக்கு வசதிகள், குடிநீர், சாலை வசதிகள் இல்லாதது, நிரந்தரமான புறக்காவல் நிலையம் அமைக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால் இது போன்ற நிலை நீடிக்கிறது. தூண்டில் முள் வளைவு அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையில் ஒரு நிரந்தரமான புறக்காவல் நிலையம் அமைத்தும், சுழற்சி முறையில் காவல் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குவிக்கப்பட்ட மணலை சமன்படுத்த வேண்டும்
முகத்துவாரத்தில் இருந்து தூர்வாரப்படும் மணல், அப்பகுதியில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை இயந்திரத்தின் மூலமாக சமன்படுத்தி, அப்பகுதியில் குடில்கள், பொழுது போக்கு விளையாட்டு அம்சங்கள், ஆங்காங்கே மரங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென சுற்றுலாபயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாண்டி மெரினாவில் இருந்து, அரியாங்குப்பம் கடற்கரையை இணைக்கும் வகையில் முகத்துவாரத்தை கடக்க உயர் மட்ட மேம்பாலம் அமைத்து கொடுத்தால், ஒரே நேரத்தில் இரு பகுதிகளுக்கு சென்று பார்த்துவர முடியும். பீச் வாலிபால், அலைசறுக்கு, பட்டம் விடுவது உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை இப்பகுதியில் நடத்த முன்வர வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Marina ,liquor stores , Garbage, Brewery, Brewery, Marina
× RELATED சென்னை பட்டினம்பாக்கத்தில் மெரினா...