×

வால்பாறை ரோட்டில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம்: வாகனங்களை வழிமறித்ததால் பீதி

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை ரோட்டில் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். இதையடுத்து, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவி மற்றும் வால்பாறை ரோடு ரோட்டில் கடந்த சில வாரங்களாக காலை மற்றும் மாலை நேரத்தில், காட்டு யானைகள் உலா வருவது அதிகரித்ததுள்ளது. நவமலை, சார்க்கார்பதி மற்றும் ஆழியார் அடர்ந்த வனத்தில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள், அணையின் பின்புறம் தண்ணீர் அருந்தி செல்கிறது. கடந்த சில வாரமாக, ஆண் ஒற்றை யானை, இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலேயே அடிக்கடி வால்பாறை ரோட்டில் உலா வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஆழியார் வனசோதனை சாவடி அருகே உலா வந்த ஒற்றை யானை, வனத்துறைக்குட்பட்ட பொருட்களை சேதப்படுத்தி சென்றது.

தினமும் அந்த யானை நவமலை மற்றும் வால்பாறை ரோட்டில் உலா வருகிறது. நேற்று, குரங்கு அருவியருகே வால்பாறை ரோட்டில் அந்த ஒற்றை யானை அங்குமிங்குமாக உலா வந்தது. பல மணி நேரம் நின்றிருந்த யானையால், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் பீதியுடன் ஆங்காங்கே நின்று கொண்டனர். பின்னர், யானை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சில மணிநேரத்திற்கு பிறகு, குரங்கு அருவியின் எதிரே உள்ள நவமலை ரோட்டுக்கு சென்றது. பின்னர், வால்பாறை ரோடு வழியாக ஆழியார் அணையின் பின்புறத்தில் உள்ள நீர்தேக்க பகுதிக்கு சென்றது. செல்லும் வழியில் ஆங்காங்கே உள்ள மரக்கிளைகளை முறித்து உண்டது, அதன்பின், சாவகாசமாக தண்ணீர் குடித்துவிட்டு சிறிதுநேரத்தில் அடர்ந்த வனத்தைநோக்கி நகர்ந்தது.
இப்படி,

குரங்கு அருவி அருகே வால்பாறை ரோடு மற்றும் நவமலை ரோட்டில், பகல் நேரத்திலேயே யானைகள் அடிக்கடி உலா வருவதால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர்.  நவமலை ரோடு மற்றும்  வால்பாறை ரோடு, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,`வனத்தில் இருந்து நீர்நிலைகளை தேடி யானை உள்ளிட்ட விலங்குகள் இடம் பெயர்ந்து வருவது அதிகரித்துள்ளது. அதிலும் குரங்கு அருவியருகே நவமலை மற்றும் வால்பாறை ரோட்டில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் உள்ளது.  எனவே, குரங்கு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தடையை மீறி அடர்ந்த வனத்திற்குள் செல்வதை தவிர்க்க வேண்டும். தற்போது, கடந்த சில வாரமாக ஒற்றை காட்டு யானை அட்டகாசம் அதிகரித்துள்ளது.

இதை நிரந்தரமாக அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், குரங்கு அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் தடையை  மீறி, வன விலங்குகளை பார்ப்பதற்காக அடர்ந்த காட்டிற்குள் செல்கிறார்களா? என தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது’ என்றனர்.

Tags : Wild Elephant, Wild Elephant, Walking
× RELATED யானை தாக்கி விவசாயி பலி