×

தேனி மாவட்டத்தில் புளியம்பழம் சீசன் மும்முரம்: வனத்துறை அதிகாரிகளுக்கு கொட்டுது வருவாய்

தேனி: தேனி மாவட்டத்தில் மேகமலையில் விளையும் ஏலம், மிளகு, காபி பயிர்களைப் பறித்து விற்பனை செய்த வனத்துறை அதிகாரிகள், தற்போது புளியம்பழங்களை பறித்து விற்பனை செய்து வருகின்றனர். வனத்துறை அதிகாரிகளே இந்த பணிகளில் ஈடுபட்டு பொருள் விற்பனை செய்து, பழியை பொதுமக்கள் மீது போடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர். தேனி மாவட்டத்தில் மேகமலையில் ஏலம், காபி, மிளகு பயிர்கள் விளைந்து கிடந்தன. இந்த வனத்தில் விளையும் பொருட்களை முறையாக ஏலம் விட்டு அதன் வருவாயினை அரசுக்கு சேர்க்க வேண்டும். ஆனால் தேனி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஏலம், காபி, மிளகு இருப்பதை கணக்கில் காட்டாமல், வன வளங்களை சுரண்டும் கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, அவர்களே சம்பளத்திற்கு ஆள் விட்டு இந்த பயிர்களை பறித்து பல லட்சம் ரூபாய்க்கு விற்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதன் மூலம் கிடைக்கும் வருவாய் வனத்துறையில் முக்கியமான பலம் மிக்க சில அதிகாரிகளுக்கும் செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இந்த முறைகேட்டினை அவர்களும் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில் தற்போது புளியம்பழம் சீசன் தொடங்கி உள்ளது. தினமும் பல லோடு புளியம்பழம் பணியாளர்கள் மூலம் அடித்து லாரிகளில் விற்பனைக்கு அனுப்புகின்றனர். வண்ணாத்திபாறை, புளியங்குடி, மாடத்தி உள்பட பல வனப்பகுதிகளில் புளியம்பழம் அடித்து மார்க்கெட்டிற்கு அனுப்பி வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதி வனத்துறை அதிகாரிகளுக்கு செல்வதாக புகார் எழுந்துள்ளது. வனத்துறை அதிகாரிகளே தவறு செய்து விட்டு, அவர்களே, ‛தங்கள் கட்டுப்பாட்டை மீறி வனவளம் கொள்ளையடிக்கப்படுவதாகவும், தடுக்க போதிய பணியாளர்கள் இல்லை என்றும் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி தப்பி விடுகின்றனர்’.

அதிகாரிகளின் இந்த நுாதன கொள்ளையையும் வனத்தை ஒட்டி வாழும் மக்கள் மீது திணிப்பது தான் வேதனையான விஷயமாக உள்ளது. இதனைத் தடுக்க மாவட்ட அளவிலான அதிகாரிகள் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags : Theni district , Theni, flax season
× RELATED கொரோனாவால் சீசன் துவங்கியும் ‘வெறிச்’ கொடைக்கானலில் கொண்டாட்டம் ‘கட்’