×

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: மறுஆய்வு மனுவை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கலாம்..: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மறுஆய்வு மனுவை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சபரிமலை உட்பட அனைத்து மத வழிபாடு சுதந்திரம் தொடர்பாக விசாரிக்க போவதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத விவகாரத்தில் எந்த அளவுக்கு பொதுநல வழக்குகள் தொடுக்க அனுமதி என்பதை குறித்தும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.  

சபரிமலை விவகாரத்தை 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது சரியே என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். சபரிமலை தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமா்வு விசாரிக்கலாமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 28-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இத்தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி 56 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் 14-ஆம் தேதி உத்தரவிட்டது.

இத்துடன் மசூதிகளில் பெண்களை அனுமதிக்கக் கோரும் விவகாரம், ஷியா முஸ்லிம்-தாவூதி போரா பிரிவைச் சோ்ந்த சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்படும் சடங்குகளுக்குத் தடை விதிக்கக் கோரும் மனுக்கள், மற்ற இனத்தைச் சோ்ந்த ஆண்களைத் திருமணம் செய்யும் பார்சி இனப் பெண்களை அந்த இனத்தவரின் வழிபாட்டு தலத்துக்குள் அனுமதிக்க கோரும் மனுக்கள் என மதரீதியாக பெண்கள் பாகுபாடாக நடத்தப்படும் விவகாரம் தொடா்பாக மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : women ,Sabarimala ,charter session ,Supreme Court Announces 9th Judicial Constituency Session , Supreme Court , 9th, Judicial Constituency
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது