×

ராஜபாளையம் பகுதியில் மக்காச்சோளம் விளைச்சல் இருந்தும் விலையில்லை: விவசாயிகள் வேதனை

ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியில் மக்காச்சோளம் விளைச்சல் இருந்தும் போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, நத்தம்பட்டி, வரகுணராமபுரம், கோபாலபுரம், சிவலிங்கபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிரிட்டுள்ளனர். ஊடு பயிராக வெண்டை, மிளகாய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளும் பயிரிடப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக மக்காச்சோளத்தில் அமெரிக்கன் புழு, படைப்புழு மற்றும் வேர்ப்புழு தாக்குதல் உள்ளிட்ட இடர்பாடுகளால் மக்காசோள விளைச்சல் குறைந்தது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 20க்கும் அதிகமான குவிண்டால் வரை விளைச்சல் காணும் இப் பகுதியில் 5 குவிண்டாலுக்கு மேல் எடுக்க முடியாமல் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

இதனால், இந்த ஆண்டு பல்வேறு விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிட ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், விவசாயிகளுக்கு கடந்தாண்டு ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈட்டு தொகையும், டெலிகேட் எனும் பூச்சி மருந்தும் வழங்கிய வேளாண்துறையினர், வேப்பம்பிண்ணாக்கு கலந்து அடி உரம் இட்டால் புழு தாக்கம் குறையும் என அறிவுரை வழங்கி, மக்கா சோளம் பயிரிடுவதற்கு ஊக்கம் அளித்தனர். இதை தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள், 120 நாள் பயிரான மக்கா சோளத்தை கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக நடவு செய்தனர். அரசு அளித்த பூச்சி மருந்தின் உதவியால் புழு தொந்தரவு இல்லை. மேலும், போதுமான மழையும் பெய்ததால், விளைச்சல் தங்கு தடையின்றி நடந்தது. தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் மக்காச்சோளம், ரூ.2400 வரை விற்ற நிலையில், இந்த ஆண்டு விவசாயிகள் எதிர்பாராத வகையில் குறைந்த விலைக்கு வியாபாரிகள் கேட்கின்றனர்.

இதனால் விளைச்சல் இருந்தும் வருமானம் இல்லாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். விலை குறைந்ததன் காரணம் குறித்து அறியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி வேல்சாமி கூறும்போது, நிலத்தை இருமுறை உழவு செய்தல், வேப்பம்பிண்ணாக்கு, உப்பு உள்ளிட்ட அடி உரம் வைத்தல், ரூ.1,200 விலை கொண்ட வீரிய ரக 3 விதை பைகள், நடவு கூலி, பயிர் உரம் இடுதல், இருமுறை களை வெட்டும் கூலி, அறுவடை இயந்திர கூலி, தொழிலாளர்கள் கூலி என ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது ஏக்கருக்கு சராசரியாக 20 குவிண்டால் வரை விளைந்துள்ளது. கடந்த மாதம் குவிண்டால் ரூ.2 ஆயிரம் வரை விற்ற நிலையில் தற்போது குவிண்டால் ரூ.1600க்கு குறைந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு குவிண்டாலுக்கு ரூ.800 வரை குறைந்துள்ளதால் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.16 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை எந்த வகையில் ஈடு செய்வது என தெரியாத நிலையில் இப் பகுதி விவசாயிகள் உள்ளோம்.

வருமானத்தை நம்பி அறுவடை செய்து, மூட்டையாக கட்டி விற்பனைக்கு தயாராக வைத்துள்ள நிலையில், வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்கின்றனர். மேலும் விலை குறையும் என்ற அச்சத்தில் வேறு வழியின்றி கிடைத்த விலையில் நஷ்டத்திற்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, அரசு நிர்ணயித்த விலைக்கு மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய வியாபாரிகளுக்கு அரசும், அதிகாரிகளும் வலியுறுத்த வேண்டும்’ என்றார். இது குறித்து மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குனர் சங்கரநாராயணனிடம் கேட்டபோது, ‘அரசு மக்காச்சோளத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,760 விலை நிர்ணயம் செய்துள்ளது. விவசாயிகளிடம் இதே விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி வருகிறோம். என்றார்.

Tags : Rajapalayam , Rajapalayam, maize yields and farmers
× RELATED ராஜபாளையம் ஏகேடி தர்மராஜா மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா