×

கோட்டூர்புரத்தில் 15 ஏக்கர் நிலத்தில் 7 கோடியில் பூங்கா விளையாட்டு திடல்: மாநகராட்சி திட்டம்

சென்னை: அடையாற்றின் கரையில் உள்ள கோட்டூர்புரத்தில் 7 கோடியில் பூங்காவும், விளையாட்டு வளாகமும் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகளை மீட்டெடுத்து பழைய நிலைக்கு கொண்டு வரும் திட்டம் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கூவம், அடையாறு ஆறுகள் தூர்வாரப்பட்டு வெள்ள தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கரையோர பகுதிகளில் உள்ள மக்களை மறுகுடியமர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. இவ்வாறு மறுகுடியமர்வு செய்யப்படும் பொதுமக்கள் புறநகர் பகுதியான பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் இங்கு செல்ல மறுப்பு தெரிவிக்கின்றனர். மேலும் தங்களின் வாழ்வாதாரம் நகரின் மையப்பகுதியில் இருப்பதால் நகருக்கு உள்ளே வீடுகளை ஒதுக்கி மறுகுடியமர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையில் சென்னை நிதிகள் சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை கோட்டூர்புரத்தில் 7 கோடியில் பூங்கா ஒன்று அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 23,340 கன மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த பூங்காவில் நடைபாதை, சைக்கிள் பாதை, குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம்,  உணவகங்கள் மற்றும் வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது.

பூங்காவின் உள்பகுதியில் பல்வேறு மரங்கள் நடப்பட உள்ளது. இந்த இடத்தில் பூங்கா அமைக்க கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதி உள்பட பல்வேறு துறைகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இடத்தில் விளையாட்டு வளாகம் ஒன்றை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கோட்டூர்புரத்தில் ஆக்கிரமிப்பு ெசய்யப்பட்டிருந்த மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் சமீபத்தில் மீட்கப்பட்டது. இதில் 10 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்கப்படவுள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படவுள்ளது. இதில் கால்பந்து, கூடைபந்து, இறகுப்பந்து உள்ளிட்ட பல்வேறு மைதானங்கள் அமைக்கப்படவுள்ளது. இந்த இடத்தை பொதுமக்களின் பொழுது போக்கு வளாகமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : park game ,land , Koturpuram, 15 acres of land, 7 crores, park game
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!