×

மகளிர் முத்தரப்பு டி20 பைனலில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா மோதல்: இங்கிலாந்து ஏமாற்றம்

மெல்போர்ன்: மகளிர் முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆஸி., இந்தியா, இங்கிலாந்து அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை லீக் ஆட்டங்களில் மோதின. இந்திய அணி 4 லீக் ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றது. இங்கிலாந்து 3 போட்டியில் 4 புள்ளிகள், ஆஸ்திரேலியா 3 போட்டியில் 2 புள்ளி பெற்றிருந்த நிலையில், நேற்று கடைசி லீக் ஆட்டத்தில் மோதின. மெல்போர்ன், ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன் குவித்தது. பெத் மூனி அதிகபட்சமாக 50 ரன் (40 பந்து, 6 பவுண்டரி), ரச்சேல் ஹேன்ஸ் 24, கேப்டன் மெக் லான்னிங் 12 ரன் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன் மட்டுமே எடுத்து 16 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. வின்பீல்டு 23, பிரன்ட் 23* ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஆஸி. பந்துவீச்சில் 4 ஓவரில் 19 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றிய சோபி மோலினியூக்ஸ் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்த போட்டியின் முடிவில் 3 அணிகளுமே தலா 4 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்ததால், மொத்த ரன் ரேட் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா (0.238), இந்தியா (-0.071) பைனலுக்கு முன்னேறின. கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட இங்கிலாந்து (-0.169) ஏமாற்றத்துடன் வெளியேறியது.மெல்போர்னில் நாளை மறுநாள் நடக்கும் பைனலில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதுகின்றன.

Tags : clash ,Australia ,India ,T20 ,UK , Women’s Tripartite, in T20 , India, Australia, Clash
× RELATED கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் படுகாயம்: 11 பேர் மீது வழக்கு