×

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் கவுன்ட் டவுனை துவங்கியது ஈரான்: முதல் படமாக சுலைமானி படத்தை அனுப்பும்

டெஹ்ரான்: அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, ‘சிமோர்க் ராக்கெட்’டைபயன்படுத்தி புதிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட் டவுனை ஈரான் தொடங்கியுள்ளது. இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் அதிகரித்துள்ளது. ;ஈரான் தனது உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்காக ‘சிர்மோர்க்’ என்று ராக்கெட்டை தயாரித்துள்ளது. இதன் மூலம், செயற்கைக்கோள்களை மட்டுமின்றி, அணு குண்டுகளையும் வீச முடியும். எனவே, இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சுற்றுச்சூழல் பற்றிய தகவலை சேகரிப்பதற்கான ‘பாயம் (தகவல்)’ என்ற செயற்கைக்கோளை ஈரான் கடந்தாண்டு ஜனவரியில் இந்த ராக்கெட் மூலம் ஏவியது. ஆனால், அது புவி சுற்றுவட்ட பாதையை அடையாததால் இத்திட்டம் தோல்வி அடைந்தது. இந்த செயற்கைக்கோளை சிமோர்க் ராக்கெட் மூலம் ஏவியபோது, அதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ‘ஐநா பாதுகாப்பு கவுன்சில் 2015ம் ஆண்டு தீர்மானத்தை ஈரான் மீறி விட்டது,’ என குற்றம்சாட்டியது.

அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஈரான், ‘அணு ஆயுதங்கள் தயாரிக்கும் எண்ணம் ஈரானுக்கு இல்லை. அமைதியான முறையில்தான் நாங்கள் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இது, விதிமுறை மீறல் அல்ல,’ என கூறியது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஈரான் செயற்கைக்கோள் தளத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடிவிபத்து சம்பவம் ஏற்பட்டது. இது குறித்து டிவிட்டரில் கிண்டலடித்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் ‘ஜாபர்’ (வெற்றி) என்ற அறிவியல் கண்காணிப்பு செயற்கைக்கோளை ‘சிமோர்க்’ ராக்கெட் மூலம் ஏவுவதற்கான கவுன்ட் டவுனை ஈரான் மீண்டும் தொடங்கியுள்ளது. 113 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள் பூமிக்கு மேலே 530 கி.மீ தொலைவில் நிலை நிறுத்தப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியை படம் பிடிக்கவும், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் பிரச்னைகளை சமாளிக்கவும், விவசாயத்தை மேம்படுத்தவும் பயன்படும் என்றும் அது தெரிவித்துள்ளது. இத்திட்டம் வெற்றி பெற்று செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டால், சமீபத்தில் அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் தளபதி சுலைமானியின் புகைப்படத்தை பூமிக்கு அது முதல் படமாக அனுப்பும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது. இது, அமெரிக்காவுக்கு கடும் கோபத்ைத ஏற்படுத்தி இருக்கிறது.

Tags : Iran ,US , US launches satellite launch, launch countdown, defiance, Iran
× RELATED ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை உடனே மீட்க ஜவாஹிருல்லா கோரிக்கை