×

டெல்லி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இவிஎம்மில் முறைகேடு செய்ய முயற்சி: ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) முறைகேடு செய்ய முயற்சி நடைபெறுவதாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் இவிஎம்களில் முறைகேடுகள் அரங்கேறியது என ஆம் ஆத்மி கட்சி அப்போது கடும் குற்றச்சாட்டு கூறியது. ஆம் ஆத்மி மட்டுமன்றி பாஜவுக்கு எதிரான வேறு சில கட்சிகளும் அப்போது குரல் கொடுத்தன. ஆனால், இவிஎம்மில் முறைகேடு செய்யவே முடியாது என தேர்தல் ஆணையம் கூறியது. எனினும், விவகாரம் முற்றுப்பெறாமல், அடுத்தடுத்த தேர்தல்களிலும் எதிரொலித்தது. பாஜ பெரும்பான்மை தொகுதிகள் கைப்பற்றிய கடந்த மக்களவை தேர்தலிலும் இவிஎம் விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நேற்று முன்தினம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதில் முதலில் 58 சதவீத வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டது. இந்நிலையில், 62.59 சதவீத வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்தில் தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்த கருத்து கணிப்பு வெளியானது. ஐந்து நிறுவனங்கள் வெளியிட்ட கணிப்பில், ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையோடு மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்கும் என்றும், பாஜவுக்கு கணிசமான தொகுதிகளும், காங்கிரஸ் தேறாது என்றும் கூறப்பட்டிருந்தன. கருத்து கணிப்பு வெளியானதில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்து, முதல்வர் கெஜ்ரிவால் போட்டோ கொண்ட பிரமாண்ட போஸ்டர்களை ஆங்காங்கே வைத்து வெற்றியை அப்போதே கொண்டாடத் தொடங்கினர். ஆனால், கருத்து கணிப்புகள் பொய்த்து போகும். பாஜ 48 இடங்களில் நிச்சயமாக ஜெயிக்கும். அப்போது இவிஎம்மை யாரும் குறைக் கூறக்கூடாது என பத்திரிகைகளுக்கு பாஜ மாநில தலைவர் மனோஜ் திவாரி பேட்டி அளித்தார்.

திவாரியின் பேட்டியை தீவிரமாக கருதிய ஆம் ஆத்மி கட்சி, அக்கட்சிக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்த தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் மற்றும் எம்.பி, எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியது. ஆலோசனையில் வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரப்படுத்தி உள்ள இவிஎம்களில் முறைகேடு நடைபெறாத வகையில் எப்படி கண்காணிப்பது என தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இவிஎம்கள் முறைகேட்டுக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங் குற்றச்சாட்டு கூறியுள்ளார். குற்றச்சாட்டு தொடர்பாக சில வீடியோ ஆதாரங்களையும் அவர் வெளியிட்டு, தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக சஞ்சய் சிங் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவை தேர்தலில் பயன்பட்ட இவிஎம்கள், பலத்த போலீஸ் பாதுகாப்போடு வாக்குப்பதிவு மையங்களில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் இந்த வீடியோவில் அதிகாரி இவிஎம்மை வீதியில் சர்வசாதாரணமாக கொண்டு செல்கின்றார். பாபர்பூர் தொகுதிக்கு உட்பட்ட சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளி அருகே அதிகாரியை மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். அவர் எப்படி இவிஎம்மை இதுபோல் கையாள முடிந்தது. அதன் பின்னணி என்ன? மற்றொரு வீடியோவை பாருங்கள். அதில், இவிஎம்கள் வீதியில் பகிரங்கமாக கொண்டு செல்லப்படுகிறது. அந்த சாலைக்கு அருகாமையில் எங்குமே வாக்கு எண்ணப்படும் மையம் கிடையாது. எனவே, இவிஎம்களில் முறைகேடு செய்ய முயற்சிகள் நடைபெறுகிறதா என தேர்தல் ஆணையம் தீவிரமாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Aadmi Bhagir ,elections ,The Delhi Election ,Delhi ,EVM ,AAP , Delhi Election, EVM used, abuse, AAP, allegation
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு