×

மூல வருவாயில் வரி பிடித்தம் செய்வதில் தாமதம் 470 கோடி வரி ஏய்ப்பு

புதுடெல்லி: டெல்லியில் விமான போக்குவரத்து, ரியல் எஸ்டேட், ஓட்டல்கள் போன்றவை  டிடிஎஸ் எனப்படும் மூலத்தில் வரி பிடித்தம் செய்து 470 கோடி வரை அரசுக்கு செலுத்தாமல் உள்ளன என்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தனிநபர் வருமான வரி வசூலில் சுமார் 40 சதவீதம் மூலத்தில் பிடித்தம் செய்யப்படும் வரிக்கான (டிடிஎஸ்)  மூலமாகவே  கிடைக்கிறது. ஒப்பந்ததாரர்கள், டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி போன்றவற்றுக்கு டிடிஎஸ் பிடிக்கப்படுகிறது. இதை  அந்த மாதம் முடிவடைந்த பிறகு  7 நாட்களுக்குள் அதற்கான படிவத்தை நிரப்பி அரசுக்கு செலுத்த வேண்டும். இதை பின்னர் வருமான வரித்துறையினரிடமிருந்து பிடிக்கப்பட்டவர்கள் உரிய கணக்கை காட்டி ரீபண்ட் ஆக பெறலாம். டெல்லியில் தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்களை வருமான வரித்துறையினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இந்த காலாண்டுக்கான பிடிக்கப்பட்ட டிடிஎஸ் தொகை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்துகிறார்களா என்பதை கவனித்து வருகிறார்கள்.  சில பட்ஜெட் ஓட்டல்கள், விருந்தினர் விடுதிகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அவை, 280 கோடி வரை டிடிஎஸ் செலுத்த வேண்டியிருப்பதை கண்டுபிடித்தனர். இதே போன்று தனியார் விமான சேவை நிறுவனங்கள் 115 கோடியை செலுத்தவில்லை என்பதையும், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் 75 கோடியை செலுத்தவில்லை என்பதையும் கண்டுபிடித்தனர். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தவறான வகையில் வரி பிடித்தம் செய்துள்ளதையும் கண்டனர்.  இந்த நிறுவனங்களின் பெயர்களை அதிகாரிகள் கூற மறுத்து விட்டனர். டெல்லியைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  முதல் வழக்கில் 6 லட்சமும், இரண்டாவது வழக்கில் 5 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

Tags : tax evasion , case of source revenue, tax deduction, delay, 470 crore, tax evasion
× RELATED ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 42 போலி நிறுவனங்கள்: 3 பேர் கைது