×

வணிக வளாக பகுதியில் 30 பேரை கொன்ற தாய்லாந்து ராணுவ வீரர் சுட்டு கொல்லப்பட்டார்: பிணைக் கைதிகள் பத்திரமாக மீட்பு

தாய்லாந்து: தாய்லாந்து நாட்டில் வணிக வளாகத்தில் ராணுவ வீரர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.  தாய்லாந்து நாட்டில் உள்ள நகோன் ரட்சிமா என்ற நகரில் பிரபல வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வார விடுமுறை என்பதால், இதில்ம க்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது, திடீரென வாகனத்தில் இருந்து இறங்கிய நபர் அங்கு இருந்தவர்களை நோக்கி இயந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் பலர் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தனர். பலர் குண்டு பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் விழுந்து துடித்தனர். இதை பார்த்த மற்ற மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு ஓடி பதுங்கினர். மேலும், வணிக வளாகத்துக்குள் நுழைந்த அந்த நபர், அங்கு இருந்தவர்களையும் சுட்டுத் தள்ளினார். மேலும், அங்கிருந்த பலரை பிணைக் கைதிகளாக பிடித்தார்.

இதைத் தொடர்ந்து, ராணுவமும் போலீசாரும் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். வணிக வளாகத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்தனர். வணிக வளாகத்தில் சிக்கிய பலர், தாங்கள் ஆபத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இரவு முழுவதும் அப்பகுதியை சுற்றி வளைத்திருந்த கமாண்டோ வீரர்கள், அதிகாலையில், வணிக வளாகத்துக்குள் ரகசியமாக நுழைந்தனர். முதல் தளத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதை பார்த்த அந்த நபர், பிணைக் கைதிகள் அனைவரையும் கொல்லப் போவதாக ஆவேசமாக கத்தினார். அவரை கமாண்டோ படையினர் பலமுறை எச்சரித்தும் அவர் பணியவில்லை. இதைத் தொடர்ந்து, அவருடைய கவனத்தை சில வீரர்கள் திசை திருப்பியபோது, மற்ற வீரர்கள் அவரை சரமாரியாக சுட்டு வீழ்த்தினர். அதில் அவர் உயிரிழந்தார். பொதுமக்கள் அனைவரையும் கமாண்டோ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

தாக்குதல் நடத்திய நபர், தாய்லாந்து ராணுவ வீரர் மேஜர் ஜக்ரபந்த் தோமா என விசாரணையில் தெரிய வந்தது. நேற்று முன்தினம் பிற்பகல் ராணுவ அதிகாரி வீடு அருகே அவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வீரர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்த ஆயுத கிடங்கில் இருந்து இயந்திர துப்பாக்கியை திருடிக் கொண்டு ராணுவ வாகனத்தில் தோமா தப்பி வந்துள்ளார். நேராக வணிக வளாகம் வந்த அவர் அங்கு பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். ராணுவ வீரர்கள் குடியுருப்பு தொடங்கி, வணிக வளாகம் வரை தாக்குதல் நடத்தியது குறித்து தோமா தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். போலீசாரின் உத்தரவை தொடர்ந்து, இந்த பதிவுகளை பேஸ்புக் நிறுவனம் நீக்கிவிட்டது.

கடன் பிரச்னையால் வீரருக்கு மனஅழுத்தம்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருபவர்களை பார்ப்பதற்காக நேற்று வந்தபோது தாய்லாந்து பிரதமர் பிரயூத் சன் ஓ சா அளித்த பேட்டியில், “13 வயது சிறுவன், பாதுகாப்பு படை வீரர் மற்றும் பொதுமக்கள்  என 26 பேர் ராணுவ வீரரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். தாய்லாந்தில்  இதுபோன்ற மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததில்லை. இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே  கடைசி முறையாக இருக்கட்டும்,” என்றார். இதனிடையே, கடன் பிரச்னையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, தோமா இதுபோல் வெறித்தனமாக நடந்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags : soldier ,Thai ,shopping mall ,shopping complex , Thai soldier , shot dead , shopping complex, killing 30 people
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...