×

கொரோனா சாவு அதிகரித்து வரும் நிலையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் எங்கே?: ரகசிய இடத்தில் இருப்பதாக தகவல்

வுகான்: சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதிபர் ஜீ ஜின்பிங்கை காணவில்லை, அவர் எங்கே? என மூத்த அரசியல் தலைவர் விமர்சித்துள்ளார். சீனாவில் கடந்த 3 வாரங்களுக்கு முன், தலைநகர் பீஜிங்கில் நடந்த 2020ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அதிபர், ‘ஒவ்ெவாரு சீனரும், நாட்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் மாபெரும் சகாப்தத்தில் வாழ்வதில் பெருமிதம் கொள்ள வேண்டும். எந்த புயலாலும், சூறாவளியாலும் நமது முன்னேற்றம் தடைபடாது,’ என்றார். அப்போது, நாட்டில் புதிய கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து அவர் எந்த விஷயத்தையும் குறிப்பிடாமல், 1.1 கோடி மக்கள் வசிக்கும் வுகான் நகரமானது அங்கிருந்து வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மூடப்படுவதாக மட்டும் அறிவிப்பு வௌயிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை. மேலும், கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் அல்லது  அறிக்கைகள் என எதிலும் அதிபரின் பங்களிப்பு இல்லை. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
பொருளாதார மந்தநிலை, ஹாங்காங்கில் போராட்டம், பீஜிங்கை புறக்கணித்த தைவான் தேர்தல், அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் என அதிபர் ஜின்பிங் இதர சவால்களை எதிர்கொண்ட நிலையில், கொரோனா தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அதிபர் ஜின்பிங், நாட்டில் சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். இதுவும் அரசியல் சார்ந்த ஒரு பிரச்னையாக கருதப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளாக ஜின்பிங் கட்டியெழுப்பிய சர்வாதிகார அமைப்புக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான சோதனையாக இது கருதப்படுகிறது. தனது செயல் திறனுக்கு எதிராக அதிருப்தி நிலவி வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஜின்பிங் போராடி வருகிறார். மேலும், இப்போது அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. கொரோனோ வேகமாக பரவி வருவதால், அவர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது எந்த இடம் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

தாய்-மகள் பாசப் போராட்டம்
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவமனைகள், பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட ஊழியர்கள் வீட்டுக்கு செல்லாமல், இங்கேயே இருந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களின் மூலமும் நோய் பரவும் அபாயம் இருப்பதால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நர்ஸ் ஒருவரும் அவரை பார்க்க வந்த மகளும் அணைத்து தழுவ முடியாமல் கண்ணீர் வடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாயை பார்க்க வந்த மகள், சிறிது தூரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார். அதேபோல், அந்த தாயும் மருத்துவமனை வாசலில் நிற்கிறார். இருவரும்  பாதுகாப்பு உடைகள், முகக் கவசம் அணிந்து இருந்தாலும், அவர்கள் நெருங்க முடியவில்லை. தாயை பார்த்து அழும் மகள், ‘அம்மா நீங்கள் இல்லாமல் வாடுகிறேன். சீக்கிரமாக வீட்டுக்கு வாருங்கள்,’ என கூறுகிறார். அதற்கு அந்த தாய், ‘அம்மா மிகப்பெரிய அரக்கனை எதிர்த்து போராடுகிறேன். அவனை தோற்கடித்த பின்னர்தான் வீடு திரும்புவேன்,’ என கூறி, மகளை அணைப்பது போன்று தனது கைகளை வளைத்து சைகை செய்கிறார். இதேபோல் மகளும் செய்து காட்டுகிறார். பின்னர் அந்த சிறுமி அழுதுகொண்டே திரும்பி சென்று விடுகிறார். தாய் மகள் இடையே நடந்த பாசப் போராட்டம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

Tags : Xi Jinping ,Chinese ,Sau ,Corona , Corona, Sau, Chinese President Xi Jinping, secret place, information
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...