×

3 மாத இடைவெளியில் வரி சீரமைப்பு இருக்காது: இனி ஆண்டுக்கு ஒரு முறைதான் ஜிஎஸ்டி மாற்றம்: நிர்மலா சீதாராமன் பேட்டி

புதுடெல்லி,: ஜிஎஸ்டி வரி இனி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய பட்ஜெட் கடந்த 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் அறிவிக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் மற்றும் திட்டங்கள் தொழில்துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் வர்த்தக அதிபர்கள், தொழில்துறையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சந்தித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழில் துறையினர், பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்த உள்கட்டமைப்பு திட்டம், எல்ஐசி பங்குகள் விற்பனை மற்றும் வேளாண் துறை தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக கருத்துக்களை பிகர்ந்து கொண்டனர். அதோடு, டிடிஎஸ் உள்ளிட்ட வரி அறிவிப்புகள் தொடர்பாக தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: தொழில்துறையினருடன் மத்திய அரசு எப்போதும் தொடர்பில் இருக்க விரும்புகிறது. வரி நிர்வாகத்தை பொறுத்தவரை புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. வரி செலுத்துவோர் நேரில் வராமலேயே விளக்கம் அளிப்பதற்கான நடைமுறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சியால் மட்டுமே இது சாத்தியம் ஆகியுள்ளது. ஜிஎஸ்டி வரியை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மட்டுமே மேற்கொண்டால் போதாது. மாநில நிதியமைச்சர்களும் பிரச்னைகளை கவனத்துக்கு கொண்டுவரவேண்டும். இப்படி இரு தரப்பும் பொறுப்புபன் இணைந்து செயல்பட்டால்தான் முடியும் என்றார்.

இதுபோல் அவர் அளித்த மற்றொரு பேட்டி ஒன்றில், ‘‘மக்களிடம் நுகர்வை அதிகரிக்கவும், 2024-25 நிதியாண்டில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை எட்டவும் பட்ஜெட்டில் அடித்தளம் இடப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பட அரசு முதலீடுகள் மேற்கொள்ளப்படும். இவை நீண்ட கால மற்றும் குறுகிய கால பலன்களை தரக்கூடியவை. ஊரக பொருளாதார நிலையை மேம்படுத்த பட்ஜெட்டில் 16 செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, இவையெல்லாம் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை அடைய உதவும். தற்போது 3 மாதங்களுக்கு ஒரு முறை ஜிஎஸ்டியில் மாற்றம் செய்வது நடைமுறையில் உள்ளது. இதை ஆண்டுக்கு ஒரு முறை என மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Nirmala Sitharaman , Once a year, GST change, Nirmala Sitharaman
× RELATED அமலாக்கத்துறை மூலம் மிரட்டி பணம்...